வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (31/05/2018)

கடைசி தொடர்பு:17:43 (31/05/2018)

இரண்டு நாள் தொய்வுக்குப் பின் சந்தையில் இன்று பாசிட்டிவான முடிவு 

இரண்டு நாள்கள் சரிவுக்குப் பின், இந்தியப் பங்குச் சந்தை இன்று வர்த்தக நேரம் முழுதும் ஒரு வலுவான நிலையில் இயங்கி நல்ல லாபத்துடன் முடிவுற்றது.

மே மாதத்திய Futures & Options டெரிவேட்டிவ்ஸ் கான்டராக்ட்ஸ் இன்று முதிர்ச்சி அடைவதால், சில முக்கியப் பங்குகள் கவுன்டர்களில் நடைபெற்ற ஷார்ட் கவரிங், பங்குகளின் விலையேற்றத்துக்குப் பெரிதும் உதவி, முக்கியக் குறியீடுகளின் மதிப்பை உயர்த்தியது.

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 416.27 புள்ளிகள் அதாவது 1.19 சதவிகிதம் உயர்ந்து 35,322.38 என முடிந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்ட்டி 121.80 புள்ளிகள் அதாவது 1.15 சதவிகிதம் முன்னேறி 10,736.15-ல் முடிவுற்றது.

இத்தாலியில் நிலவும் அரசியல் நிலை பற்றிய இறுக்கம் சற்று தணிந்திருக்கும் நிலையில், நேற்று அமெரிக்கச் சந்தையில் ஒரு நல்ல முன்னேற்றம் இருந்தது.

அமெரிக்கச் சந்தையின் நேற்றைய பாசிட்டிவான முடிவாலும், சீனப் பொருளாதார நிலை பற்றிய அறிக்கைகள் உற்சாகமளிக்கக் கூடிய வகையில் இருந்ததாலும் இன்று ஆசியாவின் பெரும்பாலான சந்தைகள் ஏற்றம் கண்டன.  

ஐரோப்பியச் சந்தைகளிலும் இன்று ஒரு ஸ்திரமான நிலையே காணப்படுகிறது.

இன்று வெளிவரவிருக்கும் ஜனவரி - மார்ச் காலாண்டுக்கான GDP புள்ளிவிவரம் ஓரளவு நம்பிக்கையூட்டுவதாக இருக்கும் என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் செலுத்தத் தூண்டியது.

சில வங்கித்துறை பங்குகள் மற்றும் எண்ணெய் நிறுவனப் பங்குகள் இன்று நல்ல முன்னேற்றம் கண்டன.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

அதானி போர்ட்ஸ்  5.1%
எச்.டி.எஃப்.சி. பேங்க்  4.7%
இந்தஸ்இந்த் பேங்க்  4%
டெக் மஹிந்திரா 3.2%
மஹிந்திரா & மஹிந்திரா 2.9%
இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் 2.3%
ஓ.என்.ஜி.சி  2.3%
இன்ஃபோசிஸ் 2.2%
எச்.டி.எஃப்.சி  2.2%
கோல் இந்தியா  2.1%
அஸோஸியேட்டட் சிமென்ட் 3.7%
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் 2.7%

விலை இறங்கிய பங்குகள் :

சன் ஃபார்மா  2.4%
டாடா மோட்டார்ஸ் 2%
ஹீரோ மோட்டோகார்ப்  1.4%
டாக்டர் ரெட்டி'ஸ் 1.7%
பாரத் எலக்ட்ரானிக்ஸ் 4.4%
 
இன்று மும்பை பங்குச்சந்தையில் 995 பங்குகள் முன்னேற்றம் கண்டன. 1655 பங்குகள் விலை சரிந்தும், 138 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிவுற்றன.


டிரெண்டிங் @ விகடன்