வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (01/06/2018)

கடைசி தொடர்பு:18:00 (01/06/2018)

10 நாள்களுக்கு பால், காய்கறிகள் சப்ளை கட்! விவசாயிகள் நடத்தும் மெகா போராட்டம்

பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் பலர் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தாங்கள் விளைவித்த காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம்

விவசாயக் கடன் தள்ளுபடி, உற்பத்திக்கு அதிக விலை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எட்டு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர் 10 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தாங்கள் பயிரிடும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் சந்தையில் விற்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். அப்படி காய்கறிகள் வேண்டும் என நினைப்பவர்கள் கிராமத்துக்கு வந்து நாங்கள் சொல்லும் விலைக்குத்தான் வாங்கிச் செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். 

கடந்த வருடம் மண்ட்சோரில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 6 விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக இன்று போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவற்றை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் இந்த 10 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ஹரியானா மற்றும் சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.