11 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்!  - பிரதமர் மோடிக்கு உணர்த்துவது என்ன? | What 11 states by poll results express to Modi?

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (01/06/2018)

கடைசி தொடர்பு:19:00 (01/06/2018)

11 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்!  - பிரதமர் மோடிக்கு உணர்த்துவது என்ன?

11 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்!  - பிரதமர் மோடிக்கு உணர்த்துவது என்ன?

தேசிய ஊடகங்கள் முழுவதையும் நேற்று ஆக்ரமித்திருந்தன 4 எம்.பி தொகுதிகள், 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ரஜினியின் கருத்துகள் குறித்த செய்திகள் நேற்று முக்கியத்துவம் பெற்றிருந்த‍தால் இடைத்தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் விவாதப் பொருளாகவில்லை. 'சாதாரண ஓர் இடைத்தேர்தல்போல் இதை எளிதில் கடந்துவிட முடியாது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கலாம்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

மோடி

11 மாநிலங்களிலுள்ள 15 தொகுதிகளில் தேர்தல் நடந்திருந்தாலும், இரண்டு தொகுதிகளின் முடிவுகளைத்தான் தேசிய ஊடகங்கள் உற்றுநோக்கின. அந்த இரண்டு தொகுதிகளில் ஒன்று, மேற்கு உத்தரப் பிரதேசத்திலுள்ள கைரானா மக்களவைத் தொகுதி. இந்த‍த் தொகுதியை காங்கிரஸ்-சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ராஷ்டிரிய லோக் தள் என்ற மாநிலக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது ஏற்கெனவே பா.ஜ.க வெற்றிபெற்றிருந்த தொகுதியாகும். மற்றொன்று, உத்தரப் பிரதேசத்திலுள்ள நூர்பூர் சட்டமன்றத் தொகுதி. இந்தத் தொகுதியை பா.ஜ.கவிடமிருந்து சமாஜ்வாடி கட்சி பறித்துள்ளது. ஏற்கெனவே நடைபெற்ற இடைத்தேர்தலில் கோரக்பூர் மற்றும் புல்பூர் மக்களவைத் தொகுதிகளை பா.ஜ.க, எதிர்கட்சிகளின் கூட்டணிகளிடம் இழந்துள்ளது. இந்த முடிவுகள், விவரிக்கவருவது ஒன்றுதான்; ' அது, பா.ஜ.கவுக்கு எதிரான அணி வலுவற்ற ஒன்று அல்ல' என்பதுதான். 

எதிர்கட்சிக் கூட்டணி

இந்த இரண்டு தொகுதிகள் மட்டும் முக்கியத்துவம் பெறுவதற்கு காரணம், இந்தியாவின் பிரதமரைத் தீர்மானிக்கும் மாநிலமாக உ.பி இருக்கிறது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 80 தொகுதிகள் உ.பி வசம் உள்ளன. 2014 தேர்தலின்போது உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க 42 சதவிகித வாக்குகளுடன் 71 தொகுதிகளை வென்றது. பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதற்கு முழுமுதற் காரணம் உ.பியில் பா.ஜ.க பெற்ற வெற்றிதான். தற்போதுள்ள சூழலில், 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு இத்தகைய மாபெறும் வெற்றி சாத்தியமில்லை என்பதை அக்கட்சி நிர்வாகிகள் உணர்ந்து வைத்துள்ளனர். மத்திய, மாநில பா.ஜ.க அரசுகளின் மீதான அதிருப்தி என்பதைத் தாண்டி, எதிரணிகளின் வியூகம் மற்றும் ஒற்றுமையே காரணமாகப் பார்க்கப்படுகிறது.  

ராகுல் காந்தி

மோடியின் பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு ஆகிய செயல்பாடுகளால் பா.ஜ.க அரசு, மக்களின் கடுமையான எதிர்ப்பை சம்பாதித்திருந்த நிலையிலும், கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 40 சதவிகித வாக்குகளுடன் 320 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பா.ஜ.க-வின் இந்த அசுர வெற்றி எதிரணியை மிரளச் செய்த‍து. இந்த வெற்றி கொடுத்த அச்சம்தான் எதிரணிகளை ஒன்றிணையவும் வைத்த‍து. அதன்பிறகு உத்தரப்பிரதேசத்தில் எதிரெதிர் அணிகளாக இருந்த சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலைச் சந்தித்தன. ஏற்கெனவே, சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. இந்த மூன்று கட்சிகளின் பலத்தை பா.ஜ.கவால் வீழ்த்த முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். இந்த மூன்று கட்சிகள் கூட்டணி சேர்ந்த பிறகு, நடைபெற்ற கோரக்பூர் மற்றும் புல்பூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.கவால் வெற்றிபெறமுடியவில்லை. இரண்டுமே பா.ஜ.க 2014-ம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்த தொகுதிகள். அதிலும் கோரக்பூர், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தொடர்ச்சியாக 5 முறை எம்.பியாக வெற்றி பெற்றத் தொகுதி. 2014 தேர்தலில் யோகி 5,39,127 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். போட்டி வேட்பாளர்களைவிட சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியில் இடைத்தேர்தலில் எதிரணி வெற்றிவாகை சூடியது. 

பாஜக , தேர்தல் முடிவுகள்

அதேபோல, நேற்று வெளிவந்த இடைத்தேர்தல் முடிவில் கைரானா மக்களவைத் தொகுதி மற்றும் நூர்பூர் சட்டமன்றத் தொகுதிகளை பா.ஜ.கவிடமிருந்து காங்கிரஸ்-சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி பறித்துள்ளது. இதிலிருந்து 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ளத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில், பா.ஜ.கவின் வெற்றி சாத்தியப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும், உத்தரப்பிரதேசத்தில் 71 தொகுதிகளில் வென்று மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பா.ஜ.க இந்தமுறை உத்தரப் பிரதேசத்தில் 20 தொகுதிகளைக்கூட நெருங்குவது கடினம் என்பதையும் உணர்த்தியுள்ளது. 2014 தேர்தலில் பா.ஜ.க 42 சதவிகித வாக்குகளையும், சமாஜ்வாடி 22 சதவிகித வாக்குகளையும் பகுஜன் சமாஜ் 19 சதவிகித வாக்குகளையும் காங்கிரஸ் 8 சதவிகித வாக்குகளையும் பெற்றிருந்த‍து. இந்தமுறை மூன்றும் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கும் நிலையில் பா.ஜ.க-வின் வெற்றி, கடந்தமுறை பெற்ற வெற்றியில் பாதிக்கும் கீழ் குறையும்.  

உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக 48 எம்.பிக்கள் கொண்ட மகாராஷ்டிராவில் 2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க, சிவசேனா கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றது. இந்தக் கூட்டணி 41 எம்.பிக்களைப் பெற்றது. தற்போது, சிவசேனாவுடனான கூட்டணியை பா.ஜ.க இழந்துள்ளது. இந்தநிலையில், மகாராஷ்டிராவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பால்கர் மக்களவைத் தொகுதியில் சிறிய அளவிலான வாக்குவித்தியாசத்தில் பா.ஜ.கவிடம் சிவசேனாவும் பாந்த்ரா-காண்டியா மக்களவைத் தொகுதியில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தேசியவாத காங்கிரஸிடம் பா.ஜ.கவும் வெற்றியை இழந்துள்ளது. இந்த முடிவுகள், மஹாராஷ்டிராவிலும் பா.ஜ.கவுக்குக் கடந்தமுறையைப்போல பெரும் வெற்றி கிடைப்பது கடினம் என்பதை உணர்த்துகிறது. 

நேற்று வெளிவந்த 11 சட்டமன்ற மற்றும் 4 மக்களவைத் தொகுதி முடிவில் 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 1 சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. இந்த இடைத்தேர்தல்கள், ஆட்சியின் இடையில் நடந்திருந்தால் இத்தகைய கவனத்தை பெற்றிருக்காது. சரியாக, இன்னும் ஒரு வருடத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நடந்ததால், இதே முடிவைத்தான் மக்கள் அந்தத் தேர்தலிலும் பிரதிபலிப்பார்கள் என நம்ப‍ப்படுகிறது. இந்த இடைத்தேர்தல் ஒரு 'மாடல்' தேர்தலாகவே கணக்கில் கொள்ளப்படுகிறது. மோடியின் இந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி விதிப்பைத் தவிர்த்து, சிறுபான்மையினர் மீதான தாக்குதல், மாட்டுக்கறி விவகாரத்தில் பட்டியல் சமூகத்தினர் மீதான தொடர் தாக்குதல்களால் உருவான ஒருவகை பாதுகாப்பற்ற சூழல் ஆகியவையும் இந்த ஆட்சியின் மீது பரவலாக வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தாண்டி, மோடியின் அடையாளமான வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கறுப்புப் பண ஒழிப்பு ஆகியவற்றிலும் மத்திய அரசு பெரியளவில் சாதித்த‍தாக மக்கள் உணரவில்லை. கடந்தமுறை முக்கியக் கூட்டணி கட்சிகளாக இருந்த சிவசேனா மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் ஆதரவை பா.ஜ.க இழந்துள்ளது.  

பாஜக

இருப்பினும், மோடி பிரதமராக பொறுப்பேற்றபின், பா.ஜ.க எந்த இடத்திலும் பெரும் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்கவில்லை. அதை கர்நாடகத் தேர்தலில் கூட பார்த்தோம். மோடி என்ற ஒற்றை மனிதரின் பிம்பம் பா.ஜ.க மீது எத்தகையை வெறுப்பு இருந்தாலும் தொடர்ச்சியாக வெற்றியைக் கொடுத்து வருவதாக பா.ஜ.கவினரே அதிகம் நம்புகிறார்கள். மிகக் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் மோடியின் காலத்தில்தான் 9 மாநிலங்களில் பா.ஜ.க பெரும்பான்மை ஆட்சியும் 9 மாநிலங்களில் பா.ஜ.கவின் கூட்டணி ஆட்சியையும் நடத்தி வருகிறது. பா.ஜ.க-வின் இத்தனைப் பெரிய வளர்ச்சியைத் தனி ஒரு கட்சியாக வேறு ஒரு கட்சி எட்டிப் பிடிப்பதற்கு பல வருடங்கள் தேவைப்படும் என்பதுதான் உண்மை. அதேநேரத்தில், தொடர் வெற்றிக் களிப்பில் திளைத்துக்கொண்டே இருந்த மோடி, எதிரணியின் கூடுகையைக் கண்டுகொள்ளவில்லை. வரப்போகும் தேர்தலில் தகுந்த கவசங்களுடன் மோடி களத்துக்கு வரவில்லையென்றால், எதிரணியின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாது என்பதை இடைத்தேர்தல் முடிவுகள் நிரூபித்துவிட்டன. 

'ஆட்ட நேரம் முடிவதற்குச் சிறிது நேரம் முன்னதாக எச்சரிக்கை மணி ஒலிக்கப்படும், அப்படி மோடி அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணியாகவே இடைத்தேர்தல் முடிவுகளைச் சுட்டிக் காட்டுகின்றனர்' அரசியல் விமர்சகர்கள். காதில் வாங்கிக்கொள்வாரா மோடி.. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!


டிரெண்டிங் @ விகடன்