வெளியிடப்பட்ட நேரம்: 10:26 (02/06/2018)

கடைசி தொடர்பு:15:09 (02/06/2018)

``விஞ்ஞான ஆராய்ச்சிக்காகவே 333 திமிங்கிலங்கள் கொல்லப்பட்டன!” - ஜப்பான் சொல்லும் விபரீத காரணம்

மக்கள் இந்தச் செயலை 'கொடுமையான செயல்' என்று விமர்சித்தாலும், ஜப்பானிய ஆய்வாளர்கள் 'விஞ்ஞான ஆராய்ச்சிக்காக' எனவே வாதடுகின்றனர். இந்தியா உட்பட சர்வதேச அளவில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் மக்களுக்கு எதிராக வைக்கும் பொதுவான வாதம்தான் இது.

``விஞ்ஞான ஆராய்ச்சிக்காகவே 333 திமிங்கிலங்கள் கொல்லப்பட்டன!” - ஜப்பான் சொல்லும் விபரீத காரணம்

ஜப்பானில் வருடாந்திர கோடை ஆராய்ச்சியில் 333 திமிங்கிலங்கள் வேட்டையாடிக் கொல்லப்பட்டுள்ளன. அதில் 120-க்கும் மேற்பட்டவை கர்ப்பிணித் திமிங்கிலங்கள் என்ற புள்ளிவிபரம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. சர்வதேச திமிங்கிலம் ஆணையம், இந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், படுகொலை செய்யப்பட்ட மின்கே திமிங்கலங்களில் 122 திமிங்கிலங்கள் கர்ப்பமாக இருந்ததாக தெரிவித்துள்ளது. 

திமிங்கிலங்கள்ம்

Photo - Social Every Things

ஜப்பானில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 8 முதல் பிப்ரவரி 28 வரை கோடை ஆராய்ச்சி  நடத்துவது வழக்கம். இந்த வேட்டையில் "அண்டார்டிக் கடல் சுற்றுச்சூழல் கட்டமைப்பு மற்றும் இயக்கவியல்" அமைப்பானது உயிர் மாதிரிகளை எடுப்பது வழக்கம்.
இம்முறை ஜப்பானைச் சேர்ந்த ஐந்து கப்பல்கள் திமிங்கில ஆராய்ச்சிக்காக தனது வேட்டையைத் தொடங்கின. வேட்டையைத் தொடங்கிய 83 நாட்களுக்கு பின்னர், முதல் இரண்டு கப்பல்கள் முன்னர் வர, மூன்று கப்பல்கள் பின்னால் அணிவகுத்து ஜப்பானின் ஷிமோனோசேகி துறைமுகத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் வந்து சேர்ந்தது. இந்த ஐந்து கப்பல்களிலும் சென்றவர்கள் 333 திமிங்கலங்களை வேட்டையாடி கரைக்குக் கொண்டுவந்தனர். 120 கர்ப்பிணித் திமிங்கிலங்கள் போக 114 திமிங்கிலக் குட்டிகளும் வேட்டையாடப்பட்டு இருந்தன.

இந்நிகழ்வைப் பற்றி ஜப்பான் கடல் ஆய்வாளர்கள் " திமிங்கிலங்கள் கொல்லப்படுவது அவசியமானது. திமிங்கலங்களின் வயதினை அதன் உள்காதுகளில் இருந்து மட்டுமே அறிந்து கொள்ள முடியும். இதற்காக திமிங்கிலங்களைக் கொல்வது மட்டுமே சரியான செயல். மிங்கே வகை திமிங்கிலத்தின் இனப்பெருக்கம் மற்றும் ஊட்டச்சத்து சுழற்சி உள்ளிட்ட ஆராய்ச்சிக்காக மட்டுமே வேட்டையாடுகிறோம். வேட்டையாடப்பட்ட திமிங்கலங்கள் அனைத்தும் வயதில் முதிர்ச்சி அடைந்திருக்கின்றன. அதனால் அவற்றின் இனப்பெருக்கம் மற்றும் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் நிகழாது" என்று பதிலளித்திருக்கிறார்கள். இவர்களின் பதில் கடல்வாழ் ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

"வெடி மருந்துகளை திமிங்கலங்களின் உடலில் செலுத்தி வெடிக்கச் செய்து மிகவும் மோசமான வகையில் திமிங்கிலங்கள் கொல்லப்பட்டுகின்றன. ஜப்பான் நெடுங்காலமாக இந்த முறையைத்தான் கையாண்டு வருகிறது. சர்வதேச அளவில் இதற்காக பல கண்டனங்கள் எழுந்தும் ஜப்பான் இந்த முறையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அவர்கள் காலநிலை மாற்றம் பற்றி புரிந்து கொள்ளவோ, கடலுயிரினங்களின் இனச்சேர்க்கை பற்றி ஆராயவோ செல்வதாக தெரியவில்லை. அறிவியல் ஆராய்ச்சிக்காக இவை கொல்லப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும், மீன் சந்தைகள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் திமிங்கலங்களின் கறி விற்பனைக்கு கிடைக்கிறது. எனவே திமிங்கிலங்கள் கறிகளுக்காக கொல்லப்படுகின்றன என்பதிலும் உண்மை இருக்கிறது" என கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கப்பல்

Photo - Eco News

கடந்த 2014-ம் ஆண்டு திமிங்கில வேட்டை என்ற பெயரில் ஜப்பான் திமிங்கிலங்களை படுகொலை செய்வதை சர்வதேச நீதிமன்றம் கண்டறிந்தது. அதன்பின்னர் ஜப்பான் திமிங்கில வேட்டையில் ஈடுபடக்கூடாது என தீர்ப்பளித்தது. தீர்ப்பு வெளியான ஒரு வருடம் மட்டும் தனது வேட்டையை நிறுத்திக் கொண்ட ஜப்பான் அடுத்த ஆண்டிலிருந்து தனது வேட்டையைத் தொடங்கியது. ஆஸ்திரேலிய திமிங்கில சரணாலயமானது, திமிங்கலங்கள், டால்பின்கள் மற்றும் சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வேலையைச்  செய்து வருகிறது. அண்டார்டிக் பகுதிகளிலும் ஆஸ்திரேலியாவின் திமிங்கில பகுதி பரவியுள்ளது. இதற்கு உரிமை கோரிய ஆஸ்திரேலியாவின் வாதத்தை ஜப்பான் ஏற்றுக் கொள்ளவில்லை. 

எதையுமே ஏற்றுக் கொள்ளாத ஜப்பான், ஆராய்ச்சி நிகழ்விற்காக அடுத்த 12 ஆண்டுகளில் 4,000 திமிங்கலங்களை வேட்டையாடத் திட்டமிட்டுள்ளது. தற்போது நடந்திருக்கும் வேட்டைக்கு 'சர்வதேச மனிதாபிமான சொஸைட்டி' தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.  திமிங்கலத்தை வேட்டையாடுவதில் எந்தவித வலுவான அறிவியல் காரணங்களும் இல்லை என அதன் நிர்வாகத் துணை தலைவர் கிட்டி பிளாக் கூறியிருக்கிறார்.

மக்கள் இந்தச் செயலை 'கொடுமையான செயல்' என்று விமர்சித்தாலும், ஜப்பானிய ஆய்வாளர்கள் 'விஞ்ஞான ஆராய்ச்சிக்காக' எனவே வாதாடுகின்றனர். இந்தியா உட்பட சர்வதேச அளவில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் மக்களுக்கு எதிராக வைக்கும் பொதுவான வாதம்தான் இது!
 


டிரெண்டிங் @ விகடன்