வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (02/06/2018)

கடைசி தொடர்பு:17:40 (02/06/2018)

ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்ட சல்மான்கான் சகோதரர்!

பிரபல இந்தி நடிகர் சல்மான்கானின் சகோதரரும் நடிகருமான அர்பாஸ்கான் ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

அர்பாஸ் கான்

11 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 7-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தநிலையில், மே 15-ம் தேதி சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை மும்பையில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். அதில், புக்கி என்று அழைக்கப்படும் சூதாட்டத் தரகர் சோனு ஜலானும் ஒருவர். ஜலானை காவல்துறையினர் விசாரித்தபோது, அவருக்கும் நடிகர் அர்பாஸ்கானுக்கும் உள்ள தொடர்பு தெரியவந்தது. அதையடுத்து, இன்று விசாரணை ஆஜராக வேண்டும் என்று காவல்துறையினர் அர்பாஸ்கானுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.

அதையடுத்து, இன்று அர்பாஸ்கான் விசாரணைக்கு ஆஜரானார். இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், 'ஐ.பி.எல் போட்டிகளின்போது அர்பாஸ்கான் பந்தயம் கட்டியுள்ளார். அவர், கடந்த ஆறு வருடங்களாகக் கிரிக்கெட் விளையாட்டில் பந்தயம் கட்டிவருகிறார். ஐ.பி.எல் போட்டிகளின்போது பந்தயம் கட்டியதில் புக்கியிடம் 2.80 கோடி இழந்துள்ளார். ஆனால், அர்பாஸ்கான் புக்கிக்கு பணம் கொடுக்கவில்லை. அதனால், புக்கி அர்பாஸ்கானை மிரட்டியுள்ளார்' என்று தெரிவித்தனர். இதுதொடர்பாகக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடந்தி வருகின்றனர்.