`அனைவரும் கேலி செய்வார்கள்’ - பிறந்த குழந்தையை தேவாலயத்தில் விட்டுச் சென்ற பெற்றோர்

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கேலிக்கை  பொருளாகி விடுவோம் என்று அஞ்சிப் பெற்ற குழந்தையை  தேவாலயத்தில் விட்டுச்சென்ற பெற்றோர்கள்.

குழந்தை

கேரளா திருச்சூரை சேர்ந்தவர் பிட்டோ. இவரின் மனைவி பிரபிதா.  இவர்களுக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் பிரபிதா கர்ப்பமாகியுள்ளார். பிரசவத்துக்காக திரூசூர் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தையும்  நல்ல படியாக பிறந்துள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையில்  இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிரபிதா மற்றும் அவரது கணவர் பிட்டோ  ஆகிய இருவரும் வீட்டுக்குச் செல்லாமல் நேரடியாக எடப்பள்ளியில்  உள்ள செயின்ட் ஜார்ஜ் ஃபோரேன் தேவாலயத்துக்குச்   சென்றுள்ளனர். இரவு 8.15 மணியளவில் தேவாலயத்தில் தாங்கள் பெற்றெடுத்த குழந்தையை வைத்துவிட்டு  யாரும் பார்க்காதவாறு அங்கிருந்து விரைந்து சென்றுவிட்டனர்.

இதன் பிறகு, குழந்தை அழும் சத்தம் கேட்டு, தேவாலயத்தின்  காவலர் ஓடிவந்துள்ளார். குழந்தையைக் கண்டவர் திகைத்துப் போய், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தேவாலயத்துக்கு விரைந்து வந்த போலீஸார் குழந்தையை மீட்டெடுத்து, அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அதில்,   `பிட்டோ மற்றும் பிரபிதா ஆகியோர் குழந்தையை தேவாலயத்தில் வைத்துச் செல்லும்  காட்சியும், பிட்டோ குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு  கவனமாக வாயிற்படியில் வைக்கும் காட்சியும் பதிவாகியிருந்தது.  இதனையடுத்து, பிட்டோ மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார்  அவரிடம் விசாரணை நடத்தினர். 

விசரணையில் அவர் கூறியதாவது,   `எங்களுக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும் எனது மனைவி கர்ப்பமானாள். நான்காவது குழந்தைக்கு தாயாகும் என் மனைவியையும், என்னையும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏளனமாகப் பார்த்து கேலி செய்வார்கள். அவர்களின் விமர்சன வலையத்துக்குள் சிக்கிக் கொள்வோம் என அஞ்சினோம். அதனாலேயே, குழந்தையைத் தேவாலயத்தில் விட்டுச் சென்று விடலாம் எனத் தீர்மானித்தோம்' எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பிட்டோ மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார்,  குற்றத்துக்கு உடந்தையாக இருந்த அவரின் மனைவி பிரபிதா மீதும் ஐ.பி.சி 317 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மீட்டெடுக்கப்பட்ட குழந்தை தற்போது அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!