வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (03/06/2018)

கடைசி தொடர்பு:09:58 (04/06/2018)

அணுஆயுதங்களுடன் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் அக்னி - 5 ஏவுகனை சோதனை வெற்றி!

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கைத் துல்லியமாக தாக்கும் அக்னி 5 ஏவுகணையின் சோதனை வெற்றியடைந்தது.

அக்னி-5  

அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணை ஒடிசாவில் உள்ள டாக்டர். அப்துல்கலாம் தீவில் இருந்து, ட்ரக்கில் பொருத்தப்பட்ட லாஞ்சர் மூலம் 9.48 மணிக்கு ஏவப்பட்டது. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் 18-ம் தேதியன்று அக்னி-5 ஏவுகணையின் 5-வது சோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில், இன்று மீண்டும் அக்னி-5 பரிசோதனை நடைபெற்றது.  அக்னி 5 ஏவுகணை ஐந்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது. இதன் மூலம் உலகில் 5000 - 5,500 கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணைகள் வைத்திருக்கும் ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் பட்டியலில் இந்தியா இணைந்தது. 

ஏற்கெனவே 350 கி.மீ பாயும் பிரிதிவி-2 , 700 கி.மீ செல்லும் அக்னி -1, 2000 கி.மீ பாயும் அக்னி -2, 3000 ஆயிரம் கி.மீ செல்லும் அக்னி -3, 4 ஆயிரம் கி.மீ சென்று தாக்கும் அக்னி- 4 ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில், அக்னி-3 பாகிஸ்தான் முழுவதையும் கட்டுக்குள் கொண்டு வரும். அடுத்ததாக , சீன நாடு முழுவதையும் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில்தான் அக்னி-5 பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. 

2012-ம் ஆண்டு முதன்முறையாக அக்னி-5 பரிசோதனை தொடங்கியது. தற்போது ஆறாவது முறையாக ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் உள்ள நான்காவது தளத்தில் இருந்து அக்னி ஐந்து ஏவுகணை ஏவப்பட்டது. இந்த ஆறு பரிசோதனைகளுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.