வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (03/06/2018)

கடைசி தொடர்பு:20:54 (03/06/2018)

சரியான நேரத்தில் ரயிலை இயக்காவிட்டால் ஊதிய உயர்வு `கட்' - எச்சரிக்கும் ரயில்வே அமைச்சர்

இனியும் ரயில்கள்  தாமதமான நேரத்தில் இயக்கப்பட்டால், மண்டலப் பொதுமேலாளர்களின் ஊதிய உயர்வில் கைவைக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் எச்சரித்துள்ளார்.

ரயில்வே அமைச்சர்

உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கை கொண்ட இந்தியன் ரயில்வேயில், சரியான நேரத்துக்கு ரயில்களை இயக்குவதில் இன்று வரையிலும் சிக்கல் நீடித்து வருகிறது. கடந்த 2017-2018 ஆண்டில் மட்டும் 30 சதவிகித ரயில்கள் குறித்த நேரத்தில் சேருமிடத்தை அடைவில்லை எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

இதுதொடர்பாக, அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் மண்டல அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில்,  `ரயில்வே சேவைகளின் தரத்தை உயர்த்தவும், ரயில் மற்றும் ரயில்நிலையங்களில் பாதுகாப்பு சேவைகளை அதிகரிக்கவும், அனைத்து ரயில் நிலையங்களிலும் சரியான நேரத்தில் ரயில்கள் செல்வது குறித்தும்' கருத்துக்கள் பரிமாறப்பட்டன. முன்னதாக, கடந்த மாதம் நடைபெற்ற  `பிரகதி' கூட்டத்தில் கலந்து கொண்ட பியூஷ் கோயலிடம் பிரதமர் மோடி, ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவது குறித்து விசாரித்ததாகவும், இதனை விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகின.

இந்நிலையில்,  `பராமரிப்புப் பணிகளைக் காரணம் காட்டி, இனி யாரும் தப்பிக்க முடியாது. ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்காவிட்டாலும், ரயில்கள் சரியான நேரத்தில் ரயில் நிலையங்களுக்குச் சென்றடையாவிட்டாலும், மண்டலப் பொதுமேலாளர்களின் ஊதிய உயர்வில் பாதிப்பு ஏற்படும். ரயில்கள் எவ்வளவு மணி நேரம் காலதாமதமாக இயக்கப்படுகின்றனவோ, அந்த அளவுக்கு மண்டலப் பொதுமேலாளர்களின் ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் பாதிப்பு ஏற்படும் என பியூஷ் கோயல் எச்சரித்துள்ளார்.