வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (04/06/2018)

கடைசி தொடர்பு:12:43 (04/06/2018)

ஒரு நாள் முன்னதாக இன்று வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்!

`நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ முடிவு செய்துள்ளதாக' மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளர் அனில் ஸ்வரூப் ட்வீட் செய்துள்ளார். 

தேர்வு முடிவுகள் நீட்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ மாணவர்களுக்கான பணியிடங்கள், நீட் நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, கடந்த மே 6-ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதுயுள்ளனர். 

இத்தேர்வை நடத்தும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், தேர்வெழுதும் மாணவ, மாணவியருக்கு ஆடைகள் அணிவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, மாணவிகள் துப்பட்டா அணியக் கூடாது என்று கடுமையான கட்டுப்பாடு விதித்தது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். 

இதையடுத்து, நீட் வினாத்தாளின் சரியான பதில்கள் அடங்கிய பட்டியல், கடந்த மே 25-ம் தேதி சி.பி.எஸ்.இ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. முன்னதாக, இந்த ஆண்டு நீட் தேர்வில், இயற்பியல் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். எனவே, நீட் தேர்வு கட்-ஆஃப் இந்த ஆண்டு குறையும் என கல்வி ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 

இந்த நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஏற்கெனவே அறிவித்தபடி, நீட் தேர்வு முடிவுகள் நாளை (ஜூன் 5) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வரூப், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், நீட் தேர்வு முடிவுகள் இன்று  வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ முடிவு செய்துள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.  இதையடுத்து, தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணியளவில் வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.