`மீண்டும் வீடு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது' - அருண் ஜெட்லி உருக்கம்!

தான் மீண்டும் உடல்நலம் தேறிவர பிரார்த்தனை செய்த நலம் விரும்பிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

அருண் ஜெட்லி

மத்திய அமைச்சரும் பா.ஜ.க மூத்த தலைவருமான அருண் ஜெட்லிக்கு சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்குச் சிறுநீரகக் கோளாறு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவர் அமைச்சகப் பணிகளில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ஜெட்லி வகித்துவந்த நிதித்துறையை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூடுதலாகக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டது. பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்குச் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே இருந்து வந்தார். ஜெட்லி சீக்கிரம் குணமடைய எனப் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

இந்நிலையில், சுமார் மூன்று வார காலம் மருத்துவமனையில் இருந்தபடி சிகிச்சைப் பெற்றுவந்த ஜெட்லி இன்று வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பியதும், தான் உடல்நலம் பெற வேண்டிய தலைவர்களுக்கு அவர் நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ``மீண்டும் வீட்டுக்குத் திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த மூன்று வாரக் காலமாக என்னைக் கவனித்து வந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவக்குழுவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். அதே வேளையில் நான் உடல்நலம் பெற பிரார்த்தித்த என்னுடைய நலம் விரும்பிகள், சக எம்.பி-க்கள், நண்பர்கள் என அனைவருக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!