வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (04/06/2018)

கடைசி தொடர்பு:17:00 (04/06/2018)

சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இறங்குமுகம் 

ஒரு பாசிட்டிவான தொடக்கத்துக்குப் பின் அடுத்த சில நிமிடங்களில் நல்ல லாபம் கண்ட இந்தியப் பங்குச் சந்தை, விரைவிலேயே தன்னுடைய லாபங்களை இழந்து மதியம் வரை ஒரு குறுகிய பாதையில் பயணித்த பின், மேலும் சரிந்து இறுதியில் குறிப்பிடத்தக்க நஷ்டத்துடன் முடிவடைந்தது.

வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சுமார் 330 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், இன்று வர்த்தக நேர முடிவில் 35,011.89 என்ற நிலையில், 215.37 புள்ளிகள் அதாவது 0.61 சதவிகிதம் நஷ்டத்துடன் முடிவுற்றது.

தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்ட்டி குறியீடு 67.70 புள்ளிகள் அதாவது 0.63 சதவிகிதம் குறைந்து 10,628.50-ல் முடிந்தது.
 
உற்சாகமளிக்கக் கூடிய வகையில் இருந்த எம்பிளாய்மென்ட் அறிக்கை, அமெரிக்க - வட கொரியா நாடுகளுக்கிடையேயான பேச்சு வார்த்தை பற்றிய சாத்தியக்கூறு மற்றும் ஸ்பெயின், இத்தாலி நாடுகளை அரசியல் நிலை பற்றி சற்று தணிந்திருக்கும் கவலை, இவற்றால் அமெரிக்கப் பங்குச் சந்தை சென்ற வெள்ளிக்கிழமையன்று நல்ல முன்னேற்றம் கண்டது.

இதைத் தொடர்ந்து இன்று ஆசியாவின் பெரும்பாலான சந்தைகள் ஸ்திரமான நிலையில் இருந்தன. ஐரோப்பியச் சந்தைகளும் முன்னேற்றம் கண்டுள்ளன.

இருப்பினும், இந்தியப் பங்குச் சந்தையில், ஒரு சிறப்பான தொடக்கத்துக்குப் பின், இன்று பங்குகளை விற்பதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தினர். 

வங்கிகளின் பெருகிவரும் வாராக் கடன்கள் பற்றிய கவலை மற்றும் அரசியல் வட்டாரத்தில் பாரதீய ஜனதா கட்சியின் சமீபத்திய பின்னடைவுக்குப் பின் உருவாகியிருக்கும் ஒரு நிச்சயமற்ற தன்மை, சந்தையில் இன்று முதலீட்டாளர்கள் மன நிலையைச் சற்று இறுக்கமாக்கியிருந்தது.

மேலும், மத்திய ரிசர்வ் வங்கியின் மானிட்டரி பாலிசி குழுவின் மூன்று நாளைய அமர்வு இன்று தொடங்கியிருக்கும் நிலையில், இந்திய வட்டிவிகிதம் பற்றிய அக்குழுவின் முடிவு என்னவாக இருக்கும் என்ற ஐயமும் முதலீட்டாளர்களை ஓர் எச்சரிக்கை உணர்வுடன் வைத்திருந்தது எனலாம்.

ரியல் எஸ்டேட், வங்கி, கேப்பிடல் கூட்ஸ், டெலிகாம், பவர் மற்றும் எப்.எம்.சி.ஜி துறை பங்குகள் பெரும்பாலும் கீழிறங்கின.

தகவல் தொழில் நுட்பம், ஆட்டோமொபைல், ஆயில் மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளின் பங்குகள் ஒரு கலப்படமான முடிவைச் சந்தித்தன.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

டாக்டர் ரெட்டி'ஸ் 2.4%
இன்ஃபோசிஸ் 1.7%
லூப்பின் 1.4%
ஹின்டால்க்கோ 1.3%
மஹிந்திரா & மஹிந்திரா 1.3%
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.2%

விலை இறங்கிய பங்குகள் :

இந்தியாபுல்ஸ் ஹவுசிங்  ஃபைனான்ஸ்  4.4%
எச்.டி.எஃப்.சி பேங்க் 3.1%
பார்தி ஏர்டெல் 2.7%
அதானி போர்ட்ஸ் 2.3%
கெயில் இந்தியா 2%
பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் 6.2%
டி.எல்.எஃப் 3.8%
பேங்க் ஆஃப் பரோடா 3.6%
சீமென்ஸ் 3.2%

இன்று மும்பைப் பங்குச் சந்தையில் 2127 பங்குகள் சரிவைக் கண்டன. 563 பங்குகள் லாபத்துடனும், 182 பங்குகள் முந்தைய விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.