வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (04/06/2018)

கடைசி தொடர்பு:20:40 (04/06/2018)

`மக்கள் நினைத்துவிட்டால் ராகுல் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது' - மனம் திறக்கும் தேஜஸ்வி யாதவ்! 

மக்கள் நினைத்துவிட்டால் ராகுல்காந்தி பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது எனப் பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, அவரின் மகனும் முன்னாள் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கட்டுப்பாட்டில்தான் செயல்பட்டுவருகிறது. இந்த இடைப்பட்டக்காலத்தில் தேஜஸ்வி யாதவ் தலைமையில் அக்கட்சி 2 இடைத்தேர்தல்களைச் சந்தித்துள்ளது. இந்த இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. இதில் சமீபத்தில் நடந்த ஜோகிஹாட் சட்டப்பேரவைத் தொகுதியில் நிதிஷ்குமார் கட்சி வேட்பாளரைவிட ராஷ்ட்ரிய ஜனதா தளம் வேட்பாளர் சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதனால் தேஜஸ்வி யாதவ் இனி நிதிஷ்குமார் மற்றும் பா.ஜ.க-வுக்கு கடும் போட்டியாக இருப்பார் எனக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இடைத்தேர்தல் வெற்றிகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், ``சமீபத்திய இடைத்தேர்தல் வெற்றியின் மூலம்  `மோடி அலை' என்பது பொய்கள் மற்றும் தந்திரங்களால் ஆனவை என மக்கள் தெரிந்துகொண்டார்கள். எங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாத்தங்கள் தேவையில்லை. அம்பேத்கரின் அரசியலைப்புச் சட்டமே போதும். பா.ஜ.க வகுப்பு வாத விஷத்தைப் பரப்பி வருகிறது. இதைத் தடுக்கவே, அக்கட்சிக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுவருகிறது. கைரானா இடைத்தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக மாயாவதி, அகிலேஷ், காங்கிரஸ் கூட்டணி அமைத்தது சரியான முடிவு. 

வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிகளைப் பிரித்துக்கொள்வதில் கூட்டணி கட்சிகளிடம் பிரச்னை ஏற்படலாம். ஆனாலும், பா.ஜ.க-வுக்கு எதிராகக் கூட்டணி அமைக்க வேண்டியது கட்டாயமானது. ராகுல் காந்திக்குப் பிரதமர் ஆகும் தகுதி இருக்கிறது. மக்கள் நினைத்தால் ராகுல் பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. முன்பைவிட ராகுல் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார். அவரைக் கண்டு மோடியும் அமித்ஷாவும் அஞ்சுகிறார்கள். அதனால்தான் ராகுல் பிரசாரம் மேற்கொண்ட இடங்களுக்குச் சென்று, அவர்கள் பிரசாரம் செய்கிறார்கள்" என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க