`தினசரி பெட்ரோல்,டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மாற்றும் எண்ணமில்லை!’ - அமைச்சர் திட்டவட்டம்

தினசரி பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் முறையை மாற்றும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நாடு முழுவதும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் முறை கடந்த ஆண்டு ஜூன் மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏற்றம்கண்டு வந்ததால், மத்திய அரசுக்கு எதிராகக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துவந்தது. இந்தநிலையில், தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மாற்றுவது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், `தினசரி விலை நிர்ணயம் செய்யும் முறையை பரிசீலனை செய்யும் எண்ணமில்லை. அதேநேரம், விலை ஏற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தொலைநோக்குப் பார்வையிலான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது’ என்றார். 

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு கேரள அரசுக்கு லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்குப் பதிலளித்த தர்மேந்திர பிரதான், ``கேரள அரசின் நடவடிக்கையை வரவேற்கிறேன். மாநில அரசுகள் வாட் வரியைக் குறைக்க வேண்டும். அதேநேரம், வாட் வரியைக் குறைத்தே ஆக வேண்டும் என மாநில அரசுகளைக் கட்டாயப்படுத்த முடியாது. கடந்த ஆண்டு நவம்பரில் சில மாநிலங்களும் வாட் வரியைக் குறைத்தன என்பதால், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்’’ என்று தெரிவித்தார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!