வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (05/06/2018)

கடைசி தொடர்பு:11:27 (05/06/2018)

`பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டேன்’ - நீட் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்

நீட் தேர்வு தோல்வியால் 8வது மாடியிலிருந்து குதித்து டெல்லி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

நீட்

இந்த ஆண்டின் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 6-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், இந்தியா முழுவதும் தேர்வு எழுதிய 13,26,725 பேரில் 7,14,598 பேர் கவுன்சலிங்குக்குத் தகுதிபெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. ராஜஸ்தான் முதல் இடமும், டெல்லி இரண்டாவது இடமும், ஹரியானா மூன்றாம் இடமும் பிடித்துள்ளது. டெல்லியில் மட்டும் 73 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி துவாரகா பகுதியில் வசித்துவரும் 19 வயது மாணவர் ஒருவர், தன் குடியிருப்பின் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மாணவரின் அறையில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில், ‘இன்று வெளியான தேர்வு முடிவுகளில் நான் தோல்வி அடைந்துவிட்டேன். ஆனால், இதை மறைத்து என் பெற்றோரிடம் பொய்கூறிவிட்டேன்’ என எழுதியிருந்ததாகவும், அவரது அறையில் உள்ள ஃபேனில் துப்பட்டா ஒன்று கட்டித் தொங்கிக்கொண்டிருந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்கொலைசெய்துகொண்ட மாணவர், 2016-ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர். இவர், கடந்த இரண்டு வருடங்களாக நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்த வருடம் வெளியான நீட் தேர்விலும் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.