`டெல்லி ஆளுநர்மீது பிரதமர் மோடி கடுங்கோபத்தில் இருக்கிறார்’ - கெஜ்ரிவால் சொல்லும் காரணம்

தற்போது இருக்கும் டெல்லி துணை நிலை ஆளுநர் பைஜால் மீது பிரதமர் மோடி கடும் கோபமாக உள்ளார் என அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். 

கெஜ்ரிவால்

இரண்டாவது முறையாக டெல்லி முதல்வராகக் கெஜ்ரிவால் பதவியேற்றதும் அப்போது துணை நிலை ஆளுநராக நஜிப் ஜங்குடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார். அதற்குக் காரணம் டெல்லி முதல்வர் பதவிக்கு அதிகாரம் குறைவு என்பதுதான். தலைநகரான டெல்லி, யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசே நேரடியாக அதிகாரம் செலுத்த முடியும். இதனால் போலீஸ் உள்ளிட்ட முக்கிய துறைகள் மத்திய அரசின் வசமே உள்ளன. இதன் பிரதிநிதியாகத் துணை நிலை ஆளுநர் செயல்படுவார். இதனால்தான் இருவருக்குமிடையேயான மோதல் போக்கு அதிகரித்தது. காவல்துறையில் அதிகாரிகளை நியமிப்பது, டெல்லி கிரிக்கெட் சங்க ஊழலை விசாரிக்க குழுவை நியமிப்பது என அனைத்திலும் நஜிப் ஜங் - கெஜ்ரிவால் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியது. இதற்குத் தீர்வாகக் கடைசியில் நஜிப் ஜங் ராஜினாமா செய்தார். இதனால் ஒருவழியாகப் பிரச்னை முடிவுக்கு வந்தது. நஜிப் ஜங் ராஜினாமாவை அடுத்து டெல்லி துணை நிலை ஆளுநராக அனில் பைஜால் நியமிக்கப்பட்டார். இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை பெரிதாக எதுவும் இல்லை. 

 

இருப்பினும் மோடிக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகிறார். அந்தவகையில், இன்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ``தற்போது இருக்கும் டெல்லி லெப்டினன்ட் கவர்னர் பைஜால்மீது பிரதமர் மோடி கடும் கோபமாக உள்ளார். கவர்னர் பைஜால் எனக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாததால் அவர்மீது மோடி கோபமாக உள்ளார். என்னுடைய அரசு டெல்லி மக்களுக்கு நல்ல ஆட்சியை வழங்கி வருகிறது. இதனால் பைஜாலும் நீக்கப்படுவார். ஆம் ஆத்மி டெல்லி மக்களுக்கு வழங்கி வரும் கல்வி போன்ற நலத்திட்டங்களை ஆளுநர் மூலம் நிறுத்த மோடி முயல்கிறார் என எனக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அதை நாங்கள் நடக்கவிடமாட்டோம். கடவுளும் மக்களும் எங்களுடன் இருக்கிறார்கள்" எனக் கூறியுள்ளார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!