வெளியிடப்பட்ட நேரம்: 20:24 (05/06/2018)

கடைசி தொடர்பு:20:24 (05/06/2018)

சந்தை மீண்டும் சரிந்தது 

உலகத்தின் ஏனைய சந்தைகளின் போக்கில் முன்னேற்றம் இருந்தும், இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று ஒரு தொய்வான நிலையே இருந்ததினால், சந்தையின் முக்கியக் குறியீடுகளான சென்செக்ஸும், நிஃப்ட்டியும் மீண்டும் வலுவிழந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், ஒரு கட்டத்தில் சுமார் 230 புள்ளிகள் சரிந்திருந்தாலும், வர்த்தக முடிவில், 108.68 புள்ளிகள் அதாவது 0.31 சதவிகிதம் சரிந்து 34,903.21 என நிலை பெற்றது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட்டி 35.35 புள்ளிகள் அதாவது 0.33 சதவிகிதம் கீழிறங்கி 10,4593.15-ல் முடிவுற்றது.

share market

மத்திய ரிசர்வ் வங்கி தனது மானிட்டரி பாலிசி அறிக்கையை நாளை வெளியிட இருக்கும் நிலையில், வட்டி விகிதம் உயர்த்தப்படுமா அல்லது தற்போதைய நிலையிலேயே வைக்கப்படுமா என்ற கேள்வி முக்கியமாகத் தொக்கி நிற்கிறதால் முதலீட்டாளர்கள் வெகு கவனத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டார்கள் எனக் கூறலாம்.

மேலும், பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி மற்றும் தன்னுடைய மானிட்டரி பாலிசி பற்றிய அதன் குறுகிய கால நிலைப்பாடு பற்றி ரிசர்வ் வங்கி என்ன கூறப்போகிறது என்றும் சந்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மே மாதத்தில் இந்தியாவின் சர்வீசஸ் செக்டார் செயல்பாடு பற்றி இன்று வெளியான ஐ.எச்.எஸ். மார்க்கிட் சர்வேயின் அறிக்கை, கடந்த மூன்று மாதங்களில் முதன் முறையாக சர்வீசஸ் துரையின் செயல்பாடு பலவீனமடைந்திருப்பதாகக் காட்டுவது, சந்தையின் மனநிலை தொய்வடைய ஒரு முக்கியக் காரணமாக இருந்தது.

இவ்வறிக்கையின் படி, மே மாதத்தில் நிக்கி சர்வீசஸ் பர்ச்சேசிங் மேனேஜர்ஸ் குறியீடு, ஏப்ரல் மாதத்தில் 51.4 என்ற நிலையிலிருந்து சரிந்து 49.6 எனக் குறைந்தது.
அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கெதிராக இந்திய ரூபாய் சற்றுப் பலவீனமடைந்ததும், சந்தையின் இன்றைய இறங்குமுகத்துக்கு ஒரு காரணம்.

டெலிகாம், மருத்துவம், தகவல் தொழில் நுட்பம், கேப்பிடல் கூட்ஸ், ரியல் எஸ்டேட் மற்றும் பவர் செக்டார் பங்குகள் சரிந்தன. வங்கித்துறை பங்குகள் இன்று பெரும்பாலும் தளர்ச்சியுற்ற நிலையிலேயே காணப்பட்டன.


இன்று விலை அதிகரித்த பங்குகள் :

சிப்லா 4.1%
பஜாஜ் ஃபைனான்ஸ் 2.5%
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 1.7%
டாடா ஸ்டீல் 1.3%
பஜாஜ் ஃபைனான்சியல் சர்வீசஸ் 1.2%
எச்.டி.எஃப்.சி 1%


விலை இறங்கிய பங்குகள் :

ஐடியா செல்லுலார் 10.5%
ஜீ டெலி 3%
டைட்டன் 2.4%
பார்தி ஏர்டெல் 2.1%
கோல் இந்தியா 2%
லார்சென் & டூப்ரோ 1.8%
யெஸ் பேங்க் 1.8%
பவர் கிரிட் 1.7%
இன்ஃபோசிஸ் 1.6%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 2168 பங்குகள் விலை சரிந்தன. 522 பங்குகள் லாபத்துடனும், 116 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிவுற்றன.