கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது டி.ஜி.பியிடம் புகார்!

கேரள மாநிலம் எடப்பாலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பினராயி விஜயன்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் எடப்பாலில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் 60 வயதுள்ள தொழிலதிபர் முகைதீன் குட்டி 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துகொண்டிருந்தார். இதை அருகில் இருந்த சிறுமியின் தாய் கண்டும் காணாமல் இருந்தார். இதுகுறித்து உடனடியாக விசாரிக்காமல் போலீஸார் அமைதியாக இருந்தனர். பின்னர் இந்தப் பிரச்னை ஊடங்கங்களில் வெளியானதை அடுத்து சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முகைதீன் குட்டி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயும் கைதுசெய்யப்பட்டார். இவர்கள் இருவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் துரித நடவடிக்கை எடுக்காமல் காலதாமதப்படுத்திய போலீஸ் எஸ்.ஐ. பேபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையே நீண்ட இழுபறிக்குப் பிறகு வழக்கை காலதாமதப்படுத்திய எஸ்.ஐ.மீதும் போக்ஸோ சட்டம் பதியப்பட்டது. ஆனால், அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். 

இந்த விவகாரம் கேரள சட்டசபையிலும் எதிரொலித்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் பெயரை வெளிப்படுத்தியதற்காக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த சித்திக் பந்தாவூர் என்பவர் முதல்வருக்கு எதிராக அம்மாநில டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். முன்னதாக சிறுமி விவகாரம் சட்டசபையில் எதிரொலித்தபோது எதிர்க்கட்சிகளுக்குப் பதில் சொல்லும்போது சிறுமியின் தாயின் பெயரை முதல்வர் கூறியதாக கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கேரளாவில் அடுத்த பூகம்பத்தை கிளப்பியுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!