வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (06/06/2018)

கடைசி தொடர்பு:18:00 (06/06/2018)

`பிரதமர் மோடிக்கு எதிராக சர்வதேச சதி நடக்கிறது!’ - பா.ஜ.க எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி வெற்றிபெறக் கூடாது என்பதற்காக, சர்வதேச அளவில் சதி நடப்பதாக கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ., சி.டி.ரவி குற்றம்  சாட்டியுள்ளார். 

மோடி

கர்நாடக மாநிலம் மங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய ரவி, ``நாடு முழுவதும் கருத்து வேறுபாடுகொண்ட கட்சிகளை மோடி அலை ஒன்றுசேர்த்திருக்கிறது. பிரதமர் மோடியைக் கண்டு அஞ்சும் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள், அவர் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைய வேண்டும் என விரும்புகின்றன. பாகிஸ்தான் நினைப்பதையே எதிர்க்கட்சிகளும் எண்ணுகின்றன. மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று மோடி, மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, மிகப்பெரிய சதி நடக்கிறது. பிரதமர் பதவியில் மீண்டும் மோடி அமர்ந்தால், ஒரு தலைவராக அவரது வலிமை மேலும் அதிகரித்துவிடும் என அவர்கள் அஞ்சுகிறார்கள். நாட்டை வலுப்படுத்தும் வகையில் செயல்பட்டுவரும் பிரதமர் மோடிக்கு, வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மக்கள் நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறேன்’’ என்றார். 

கர்நாடகாவில் ஆட்சியமைத்துள்ள காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணியை விமர்சித்த அவர், ஆட்சி அதிகாரத்துக்காக மாநிலக் கட்சிகள் போல காங்கிரஸ் கட்சி செயல்படுவதாகக் கூறினார். கர்நாடகாவில் 104 இடங்கள் கிடைத்தும், பெங்களூரு, பிஜாப்பூர், பெல்லாரி, பெலகாவி மற்றும் பைடர் ஆகிய பகுதிகளில் கிடைத்த தோல்வியே, ஆட்சியமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை கிடைக்காததற்குக் காரணம் என்றும் ரவி தெரிவித்தார்.