வெளியிடப்பட்ட நேரம்: 18:12 (06/06/2018)

கடைசி தொடர்பு:18:12 (06/06/2018)

பெங்களூரு தமிழர்களுக்கு நட்ராஜ் தியேட்டர் ஏன் ஸ்பெஷல்

நட்ராஜ் தியேட்டர் மூடப்பட்ட பின் வெளியாகும் முதல் ரஜினி படம் 'காலா'. கர்நாடகாவில் 'காலா' படத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பெங்களூரு தமிழர்களுக்கு நட்ராஜ் தியேட்டர் ஏன் ஸ்பெஷல்

திரிபுவன், கைலாஷ், அலங்கார், கெம்பே கௌடா, ஓபேரா, ப்ளாஸா, பல்லவி, கினோ, கேலக்ஸி, ப்ளூ மூன், ப்ளூ டயமண்ட், கீதாஞ்சலி, ஹிமாலயா, சென்ட்ரல், சிவாஜி, தேவி, சங்கம், லக் ஷ்மி, நாகா, மாருதி, பிரபாத், நந்தா, பராமவுன்ட், மினர்வா, சாகர்... இவையெல்லாம் பெங்ளூருவில் வரிசையாக மூடப்பட்ட சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்கள். இந்த வரிசையில் நட்ராஜ் தியேட்டரும் சேர்ந்தபோது, பெங்களூரு வாழ் தமிழர்கள் சோகத்தில் மூ்ழ்கினார்கள். 1,100 இருக்கைகள்கொண்ட இந்தத் தியேட்டர்தான், பெங்களூருவில் இரண்டாவது மிகப் பெரிய தியேட்டர். யஷ்வந்த்பூர், ஸ்ரீராமபுரா பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு நட்ராஜ்தான் லிட்டில் கோலிவுட். இந்தத் தியேட்டர்  மூடப்பட்ட பின், கூட்டம் கூட்டமாக வந்து கட்டடத்தை வெறித்து நோக்கிய பல ரசிகர்களும் உண்டு.  ஒரு தியேட்டருடன் ரசிகர்கள் இந்தளவுக்கு எமோஷனலாக இணைத்திருக்கிறார்கள் என்றால், பின்னணியில் பலமான காரணம் இல்லாமலா இருக்கும்?

நட்ராஜ் தியேட்டர்

பெங்களூரு சேஷாத்ரி நகரில் உள்ள நட்ராஜ் தியேட்டரில், பெரும்பாலும் தமிழ்ப் படம்தான் ரிலீஸ் செய்யப்படும். எப்போதெல்லாம் காவிரிப் பிரச்னை விஸ்வரூபம்  எடுக்கிறதோ, அப்போதெல்லாம் போராட்டக்காரர்கள்  நட்ராஜ் தியேட்டர் நோக்கிதான் ஓடுவார்கள். நட்ராஜ் தியேட்டரின் உரிமையாளர் கன்னடர்தான். ஆனால், காவிரி கண்ணை மறைத்துவிடும். நட்ராஜ் தியேட்டரை சின்னாபின்னப்படுத்தி விட்டே ஓய்வார்கள். ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும் ஃபீனிக்ஸ் பறவையாக நட்ராஜ் தியேட்டர் எழுந்து நிற்கும். மீண்டும் தமிழ்ப் படங்கள்தான் வெளியிடப்படும். 1991- ம் ஆண்டு முதல் பல தாக்குதல்களைச் சந்தித்தாலும், காவிரி விவகாரம் காரணமாக மாதக்கணக்காக மூடப்பட்டுக்கிடந்தாலும்  48 ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கிய நட்ராஜ் தியேட்டர், கடந்த மார்ச் மாதத்தில் மூச்சை நிறுத்திக் கொண்டது. விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா... இங்கு வெளியிடப்பட்ட கடைசி தமிழ்ப் படம். 

1970-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தியேட்டரில், நடிகர் ராஜ்குமார் நடித்த 'பரோபகாரி ' என்கிற கன்னடப்படம்தான் முதன்முதலாக திரையிடப்பட்டது. தியேட்டரைச் சுற்றி ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் வசித்ததால், நாளடைவில் தமிழ்ப் படங்கள் மட்டுமே இங்கே வெளியிடப்பட்டன. நடிகர் ரஜினிகாந்த் நடித்த 100 தமிழ் சினிமாக்கள்  இங்கு ரிலீஸ் ஆகியுள்ளன. அதனால்,  ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு நட்ராஜ் தியேட்டர் ஸ்பெஷல். ரஜினி படம் வெளியானால், நட்ராஜ் தியேட்டர் அமளி துமளியாகும்.

பங்குதாரர்களிடையே நிலவும் சொத்துத் தகராறும், மல்டி ஃப்ளெக்ஸ் தியேட்டரை நோக்கி ரசிகர்கள் படையெடுப்பதும் நட்ராஜ் தியேட்டர்  மூடலுக்கு முக்கிய காரணம்.  தியேட்டரில் பணிபுரிந்த 40  ஊழியர்களுக்கும் சம்பளத்தை செட்டில்செய்து அனுப்பிவிட்டார்கள். எனினும் பங்குதாரர்கள் நட்ராஜ் தியேட்டரை விற்க முடிவு செய்யவில்லை. 'இந்த இடம் விற்பனைக்கு அல்ல ' என்கிற போர்டு, தியேட்டர் முன் தொங்குகிறது. தியேட்டரை குத்தகைக்கு எடுத்து நடத்திவந்த புட்டண்ணா என்பவருக்கும் பங்குதாரர்களுக்குமிடையே  தியேட்டரை மீண்டும் திறப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் சொல்லப்படுகிறது. 

நட்ராஜ் தியேட்டர் மூடப்பட்ட பின் வெளியாகும் முதல் ரஜினி படம் 'காலா'. கர்நாடகாவில் 'காலா' படத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். கபாலி இ்ங்கு வெளியானபோது,  தீபாவளி போல கொண்டாடித் தீர்த்தனர் ரஜினி ரசிகர்கள். ஸ்ரீராமபுரத்தைச் சேர்ந்த தீவிர ரஜினி ரசிகர் குமாரவேலு, '' நடிகர் ரஜினிகாந்த் படம் வெளியானால் இந்தத் தியேட்டரை வித்தியாசமாக அலங்கரித்து, திருவிழாபோல கொண்டாடி மகிழ்வோம். என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று பல வாரங்களுக்கு முன்பே திட்டமிடுவோம்.  காவிரிப் பிரச்னை வெடித்தால், பல மாதங்கள் இந்தத் தியேட்டர் மூடப்பட்டு கிடக்கும். எப்போது மீண்டும் திறப்பார்கள் என்று நாங்கள் காத்துக்கிடப்போம். எத்தனை தியேட்டரில் படம் பார்த்தாலும் நட்ராஜ் தியேட்டரில் படம் பார்க்கும் திருப்தி கிடைக்காது.  எங்கள் உணர்வுடன் கலந்துவிட்ட இந்தத் தியேட்டர், பொருளாதார நிலை காரணமாக மூடப்பட்டது வேதனைதருகிறது. அருகிலுள்ள சம்பிஜ் தியேட்டரில் காலா வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது. நட்ராஜ் தியேட்டர் போலவே அந்தத் தியேட்டரையும் நாங்கள் அலங்கரிப்போம் '' என்கிறார் மிகுந்த  எதிர்பார்ப்புடன். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க