ஆதரவற்ற குழந்தைக்குப் பாலூட்டிய பெண் காவலர்...நன்றி அர்ச்சனா! #ThankyouArchana

"அந்தக் குழந்தை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. உடம்பு முழுவதும் ஒரே ரத்தம். தொப்புள்கொடி, கழுத்தைச் சுற்றியிருந்தது. குழந்தையை விட்டுச்சென்றவர்கள், ரத்தத்தைக்கூட சுத்தம் செய்யாமல் சென்றிருக்கிறார்கள்”.

ஆதரவற்ற குழந்தைக்குப் பாலூட்டிய பெண் காவலர்...நன்றி அர்ச்சனா! #ThankyouArchana

ன்று உலகம் முழுவதும் நடக்கும் வன்முறைகளும் மனிதநேயமற்ற செயல்களுமே சமூக வலைதளங்களிலும் செய்தித்தாள்களிலும் நிரம்பி வழிகின்றன. இதில், என்றோ வரும் மழைத்துளியாக நடக்கும் சில நெகிழ்ச்சியான சம்பவங்களே, இந்தப் பூமியை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. அப்படியான ஒரு சம்பவம், பெங்களூரில் ஒரு காவல் நிலையத்தில் நடந்துள்ளது.

பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் பிளாஸ்டிக் பையில் சுற்றியிருந்த பச்சிளம் குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. உதவி துணை ஆய்வாளர் நாகேஷ், இந்தத் தகவலறிந்து சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்றார். 

"அந்தக் குழந்தை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. உடம்பு முழுவதும் ஒரே ரத்தம். தொப்புள்கொடி, கழுத்தைச் சுற்றியிருந்தது. குழந்தையை விட்டுச்சென்றவர்கள், ரத்தத்தைக்கூடச் சுத்தம் செய்யாமல் சென்றிருக்கிறார்கள்” என்கிறார்.

அந்தக் குழந்தையை அருகில் இருக்கும் மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்று சிகிச்சை அளித்துவிட்டு, காவல் நிலையத்துக்குக் கொண்டுவந்துள்ளார். ஆனால், குழந்தை எந்தச் சலனமும் இல்லாமல் இருந்துள்ளது. அழவும் இல்லை. காவல் அதிகாரிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அந்த நேரம், அங்கிருந்த அர்ச்சனா என்ற பெண் காவலர், அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு தனியறைக்குச் சென்று பாலூட்டினார். தன் பிரசவ விடுமுறை முடித்துப் பணியில் சேர்ந்து 15 நாளே ஆகின்றன அர்ச்சனாவுக்கு. அவர் பாலூட்டிய சிறிது நேரத்திலேயே குழந்தை குரலெடுத்து அழ, காவல் நிலையத்திலிருந்த அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். அர்ச்சனா மடியிலேயே உறங்கிவிட்டது குழந்தை.

அர்ச்சனா

PC: facebook.com/BlrCityPolice

இதுகுறித்து அர்ச்சனா கூறுகையில், "அந்தக் குழந்தையைப் பார்க்கும்போது என் குழந்தையைப் பார்ப்பதுபோலவே இருந்தது. அதனால்தான் பாலூட்டினேன்” எனத் தாய்மையுடன் நெகிழ்கிறார். 

இந்தச் செய்தியை, பெங்களூரு காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, அர்ச்சனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது. 'எங்களின் காவலர் அர்ச்சனா, ஆதரவற்ற குழந்தைக்குப் பாலூட்டியதற்காக தலைவணங்குகிறோம். அவர் சமீபத்தில்தான் பிரசவ விடுமுறை முடிந்து பணியில் சேர்ந்திருக்கிறார்' என்று தெரிவித்துள்ளது.

அர்ச்சனா

இதைக் கேள்விப்பட்ட கர்நாடகா முதல்வர் குமாரசாமி, "ஆதரவற்ற குழந்தையைக் காவலர்கள் காப்பாற்றியதைப் படித்து மனம் நெகிழ்ந்துபோனேன். மிக விரைவில் அந்தப் பெண் காவலரை, அந்த உன்னதத் தாயை, சந்திப்பேன். என் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிப்பேன்” என்று தன் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்தக் குழந்தையை பெங்களூரில் இருக்கும் 'ஷிஷூ மந்திர்' (Shishu Mandir) என்ற குழந்தைகள் மையத்தில் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். மேலும், அந்தக் குழந்தைக்குக் காவல்துறையினரே `குமாரசாமி' என்று  பெயர் சூட்டியுள்ளனர். "இந்தக் குழந்தை இப்போது அரசாங்கத்தின் குழந்தை. அரசுதான் இந்தக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், குமாரசாமி என்று பெயர்வைத்தோம்” என்கிறார் காவலர் நாகேஷ்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம், சமூக வலைதளத்தில் பரவியதும் அர்ச்சனாவுக்குப் பலரும் #ThankYouArchana என்ற ஹெஷ்டேக்குடன் வாழ்த்துகள் மழை பொழிந்துகொண்டிருக்கின்றனர். 

இன்றைய சூழ்நிலையில், நாடு முழுவதும் சாதி, மதம், பொருளாதார ஏற்றத்தாழ்வு என நாம் பிளவுபட்டிருக்கிறோம் என்பது கசப்பான உண்மை! இதற்கிடையே, அர்ச்சனா போன்ற மனிதிகளும் நம் நாட்டில்தான் வாழ்கிறார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மைதாம்!

மிக்க நன்றி அர்ச்சனா!

அக்குழந்தைக்குப்  பாலூட்டியதற்காக மட்டுமல்ல; மனிதர்களின் ஆழ்மனத்தில் இருக்கும் மனிதநேயத்தை நினைவூட்டியதற்காகவும்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!