வெளியிடப்பட்ட நேரம்: 18:16 (07/06/2018)

கடைசி தொடர்பு:18:16 (07/06/2018)

சந்தையில் மீண்டும் உற்சாகமான போக்கு!

துவக்கம் முதல் வர்த்தக நேரம் இறுதி வரை நிலவிய உற்சாகமான மனநிலை காரணமாக, தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று இந்திய பங்குச் சந்தையில் பங்குகள் வெகுவாக விலையுயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் 284.20 புள்ளிகள். அதாவது 0.81 சதவிகிதம் முன்னேறி 35,463.08 என முடிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட்டி 83.70 புள்ளிகள். அதாவது 0.78 சதவிகிதம் உயர்ந்து 10,768.35-ல் முடிந்தது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி, நடப்பு 2018-19-ம் ஆண்டில் 7.3 சதவிகிதமாக, சர்வதேச அளவில் மிகத் துரிதமான வளர்ச்சி கண்டதாக இருக்கும் என்ற உலக வங்கியின் கணிப்பு பற்றிய செய்தி, இன்று சந்தையில் முதலீட்டாளர்கள் மனநிலையைப் பெருமளவில் உற்சாகப்படுத்தி, பங்குகளை வாங்கத் தூண்டியது.

தனது மானிட்டரி பாலிசி அறிக்கையை நேற்று வெளியிட்ட மத்திய ரிசர்வ் வாங்கி, வட்டி விகிதத்தை கால் சதவிகிதம் உயர்த்தியதும், இந்தியப் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7.3 சதவிகிதமாக இருக்கும் என்று தனது கணிப்பைக் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது..

மேலும், வர்த்தக யுத்தம் பற்றி சற்று தணிந்திருக்கும் கவலை காரணமாக, நேற்று அமெரிக்க சந்தையிலும், இன்று பெரும்பாலான ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளிலும் நிலவிய பாசிட்டிவ்வான போக்கும் இந்தியச் சந்தையில் பிரதிபலித்தது.

இன்றைய வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், ஆயில், பவர் மற்றும் மெட்டல் துறை பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டன. தகவல் தொழில் நுட்பம் மற்றும் டெலிகாம் துறைகளிலும் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் இருந்ததைக் காண முடிந்தது. சில வங்கிகளின் பங்குகளும் லாபத்துடன் முடிந்தன.


இன்று விலை அதிகரித்த பங்குகள் :

டாடா ஸ்டீல் 3.8%
டாடா மோட்டார்ஸ் 3.1%
இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் 2.8%
ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் 2.5%
ஆக்ஸிஸ் பேங்க் 2.1%
ஏசியன் பெயின்ட்ஸ் 2.1%
ஸ்டீல் அத்தாரிட்டி, ஏ.பி.பி., ஆர்.ஈ.சி., ஹாவேல்ஸ் இந்தியா, ஐடியா செல்லுலார் மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டன.

விப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், யு.பி.எல்., பஜாஜ் ஃபைனான்சியல் சர்வீசஸ், ஓ.என்.ஜி.சி, பாரத் பெட்ரோலியம், 
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் யூனிலீவர்  மற்றும் டெக் மஹிந்திரா பங்குகள் 1.4 சதவிகிதம் முதல் 2 சதவிகிதம் வரை லாபம் ஈட்டின.

இன்று விலை இறங்கிய பங்குகள் :

போஸ்ச் 1.7%
டைட்டன்  1.3%
எய்ச்சேர் மோட்டார்ஸ் 1%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1961 பங்குகள் விலை உயர்ந்தன. 747 பங்குகள் நஷ்டத்துடனும் 111 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிவடைந்தன.