வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (08/06/2018)

கடைசி தொடர்பு:10:40 (08/06/2018)

கொச்சுவேலி - மங்களூர் இடையேயான அந்த்யோதயா ரயில் சேவை நாளை தொடக்கம்

குஷன் இருக்கைகள், சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மொபைல் - லேப்டாப் சார்ஜ் செய்ய பிளக் பாயிண்ட் ஆகிய சிறப்பம்சங்களை கொண்ட கொச்சுவேலி முதல் மங்களூர் வரை செல்லும் முன்பதிவில்லாத அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்க விழா நாளை காலை நடக்கிறது.

குஷன் இருக்கைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மொபைல் - லேப்டாப் சார்ஜ் செய்ய பிளக் பாயின்ட் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்ட கொச்சுவேலி முதல் மங்களூர் வரை  செல்லும் முன்பதிவில்லாத அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்க விழா, நாளை காலை நடக்கிறது.

ரயில்

மத்திய அரசு, சாதாரண மக்களுக்கான குறைந்த கட்டணத்தில் ரயில் சேவையை நாடுமுழுவதும் செயல்படுத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் 200 ரூபாய் கட்டணத்தில் செங்கோட்டை முதல் சென்னை வரையிலான முன்பதிவில்லாத பெட்டிகளைக் கொண்ட அந்த்யோதயா ரயில், இன்று முதல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று கேரள மாநிலம் கொச்சுவேலி முதல் மங்களூர் வரை செல்லும் அந்த்யோதயா ரயில் சேவை தொடக்க விழா, நாளை காலை 10 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தில் நடக்கிறது.  மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கொஹைல், மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தனம் ஆகியோர் கொடியசைத்து இயக்கிவைக்கின்றனர். மதியம் 1.15 மணிக்கு புனலூர் - செங்கோட்டை பிராட்கேஜ் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி புனலூர் ரயில் நிலையத்தில் நடக்கிறது. சங்ஙனாசேரி ரயில் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை மாலை 4.45 மணிக்கு மத்திய அமைச்சர்கள் திறந்துவைக்கின்றனர்.

ரயில்

கொச்சுவேலி - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்துக்கு இரண்டு நாள்கள் இயக்கப்படுகிறது. வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில், இரவு 9.25 மணிக்கு கொச்சுவேலியிலிருந்து புறப்படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் மறுநாள் காலை 9.15 மணிக்கு மங்களூரைச் சென்றடையும். மங்களூரிலிருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இரவு 8 மணிக்கு மங்களூரிலிருந்து புறப்படும் ரயில், அடுத்த நாள் காலை 8.15 மணிக்கு கொச்சுவேலியைச் சென்றடையும். முழுவதும் முன்பதிவில்லா பெட்டிகளைக்கொண்ட அந்த்யோதயா எஸ்க்பிரஸ் ரயிலில் குஷன் சீட்டுகள், எல்.இ.டி. விளக்குகள், மொபைல், லேப்டாப் சார்ஜ் செய்வதற்கான பிளக் பாயின்ட், சுதந்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.