ஏசியும் இல்லை... மின் விசிறியும் இல்லை..! - உ.பி அரசு மருத்துவமனையில் பறிபோன 4 உயிர்கள்

கான்பூர் மருத்துவமனையில், ஏ.சி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், நோயாளிகள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூர்
 

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கிவருகிறது. இது, உ.பி அரசின் கீழ் இயங்கும் மருத்துவமனை ஆகும். இங்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் குழந்தைகள் உட்பட 11 நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்தனர். மருத்துவமனையின் ஏ.சி இணைப்பு பெரும்பாலான நேரம் அணைத்து வைக்கப்பட்டிருக்குமாம். மின்விசிறியும் கிடையாது. இதனால், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் காற்றோட்டம் இல்லாமல் அவதிப்பட்டுள்ளனர்.

கான்பூர்
 

கடும் வெயில் மற்றும் புழுக்கத்தால், நோயாளிகளின் உறவினர்கள் டேபிள் ஃபேன் வைக்க அனுமதி அளிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். டேபிள் ஃபேன் எல்லாம் வைக்கக் கூடாது என மருத்துவமனை மறுத்துவிட்டது. நேற்றிரவு முழுவதும் காற்றோட்டம் இல்லாமல் அவசர சிசிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகள் அவதிப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், 11 பேரில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட நீதிபதி சுரேந்திர சிங், மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினார். உடனடியாக 2 ஏசி இயந்திரங்களைப் பொருத்துமாறு உத்தரவிட்டுள்ளார். 

ஏசி, மின் விசிறி இல்லாததால் நோயாளிகள் உயிரிழந்ததாகக் கூறப்படும் புகாரை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. இறந்தவர்களில் இரண்டு பேர் மாரடைப்பு காரணமாகவும், இரண்டு பேர் நாள்பட்ட நோய் காரணமாகவும் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். `ஏ.சி இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் உடனடியாக சரிசெய்யப்பட்டுவிட்டது’ என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நோயாளிகளின் உறவினர்கள், `இந்த மருத்துவமனையில் பெரும்பாலான நேரம் ஏசி இயங்காது. மின் விசிறியும் இல்லை. மருத்துவர்கள் ரவுண்ட்ஸ் வரும்போது மட்டும்தான் ஏசி இணைப்பை ஆன் செய்வார்கள்’ என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு , உ.பி கோரக்பூர் மருத்துவமனையில், ஆக்ஸிஜன் சப்ளை இல்லாததால் 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் இறந்தது குறிப்பிடத்தக்கது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!