Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

''ஆர்.எஸ்.எஸ் லட்சியங்களைத்தான் பிரணாப் முகர்ஜி பேசியுள்ளார்''- வானதி ஶ்ரீனிவாசனின் 'அடடே' விளக்கம்

Chennai: 

ஆர்.எஸ்.எஸ். முகாமில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு பேசியிருப்பது அனைவரது புருவத்தையும் உயர்த்தியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஒருவர், ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் பங்கேற்பதா... என்ற சர்ச்சை றெக்கை கட்டிப் பறக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி நிறைவு முகாம் நேற்று நடைபெற்றது. முன்னதாக இம்முகாமில், கலந்துகொள்வதற்காக முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதே, காங்கிரஸ் முகாமிலிருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், அவற்றையெல்லாம் புறந்தள்ளிய பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். முகாமில் கலந்துகொண்டதோடு, "இந்தியாவில் பல்வேறு இனம், மொழி மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். இந்தப் பன்முகத் தன்மைதான் உலகளவில் இந்தியாவின் தனித்துவ அடையாளமுமாக இருக்கிறது. எனவே, மத ரீதியாகவோ அல்லது சித்தாந்த ரீதியாகவோ சர்வதேச அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முயல்வது, அதன் தனித்துவத்தை நீர்த்துப் போகச்செய்துவிடும்'' என்று அறிவுறுத்தும்வகையிலும் பேசியிருக்கிறார்.

இந்தப் பேச்சு குறித்து தமிழகப் பி.ஜே.பி-யின் மாநிலத் துணைத் தலைவர் வானதி ஶ்ரீனிவாசனிடம் பேசினோம்.... "பிரணாப் முகர்ஜி பேசிய அதே பன்மைத்துவம்தான் இந்தியாவின் அடையாளம் என்று ஆர்.எஸ்.எஸ்-ஸும் நம்பிக்கொண்டிருக்கிறது. 

அனைத்து மக்களும் இறைவனுடைய குழந்தைகள் என்று பார்க்கின்ற இந்து தர்மம்தான் இந்திய நாட்டின் அடையாளம். இதைத்தான் பிரணாப் முகர்ஜியும் தன்னுடைய வார்த்தைகளில் அழகாகச் சொல்லியிருக்கிறார். நேற்று பிரணாப் பேசிய அத்தனை வார்த்தைகளுமே ஏற்கெனவே, ஆர்.எஸ்.எஸ்-ஸின் உயிர்த் துடிப்புள்ள லட்சியங்களாக, துடிப்புள்ள வாழ்க்கை முறையாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இந்த நோக்கத்துடனேயே மக்களை அணுகுகிறார்கள்; சேவை செய்கிறார்கள். 

எனவே, பிரணாப் முகர்ஜியின் வார்த்தைகள் என்பது, எந்த லட்சியத்துக்காக ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் வாழ்ந்துவருகிறார்களோ அதைப்பற்றி வெளியுலகுக்குக் கூறுவதுபோலவே அமைந்திருக்கின்றன. 

ஆர் எஸ் எஸ் முகாமில் பிரணாப் முகர்ஜி

ஆர்.எஸ்.எஸ் ஒன்றும் தீண்டத்தகாத அமைப்பு அல்ல. இந்த நாட்டில் ஒவ்வொரு நெருக்கடிக் காலகட்டத்தின்போதும், மக்களோடும் நாட்டினோடும் துணை நிற்கக்கூடிய அமைப்புதான். இந்தியா - சீனா போரின்போது, ஆர்.எஸ்.எஸ்- தொண்டர்கள் அரும்பணி ஆற்றினர். இதனைக் கருத்திற்கொண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ்-ஸையும் கலந்துகொள்ள வைத்தார் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. இதனை இப்போதைய காங்கிரஸ் கட்சியினருக்கு நாங்கள் நினைவூட்ட விரும்புகிறோம்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி-யின் பன்முகத்தன்மை குறித்து கேள்வி கேட்க விரும்புவோரிடம் நாங்கள் முன்வைக்கிற கேள்வி ஒன்று இருக்கிறது.... அதாவது இந்த நாட்டில் பிரிவினையைக் கையாண்டு பாகிஸ்தான், பங்களாதேஷ் என இரண்டு தேசங்களாகப் பிரிந்து சென்றவர்களும்கூட ஜனநாயக நாடுகளாகத்தான் அறியப்படுகிறார்கள். ஆனால், அங்கேயுள்ள அடிப்படை மதவாதிகளால், ஜனநாயகமே கேள்விக்குறியாகும் சூழல்தான் அந்த நாடுகளிடையே நிலவிவருகிறது. ஆனால், இந்தியாவில், இன்னமும் பன்முகத்தன்மை கட்டிக்காக்கப்படுகிறது என்றால், அதற்கான அடிப்படைக் காரணம் இங்குள்ள `இந்து தர்மம்'தான்!'' என்கிறார் வானதி ஶ்ரீனிவாசன்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திருச்சி வேலுச்சாமியின் பார்வையோ இவ்விஷயத்தில், வித்தியாசமாக இருக்கிறது. இதுகுறித்துப் பேசும் அவர்,

"பிரணாப் முகர்ஜியும் சந்தர்ப்பவாதியாகிவிட்டார். அதைத் தாண்டி வேறென்ன சொல்வது...?

ஆர்.எஸ்.எஸ் முகாமில், பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டது குறித்து காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்லது சோனியாகாந்தி, ராகுல்காந்தியின் கருத்து என்னவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் பிரணாப் செய்தது பச்சை சந்தர்ப்பவாதம்.

ஏனெனில், காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்தவர், கட்சியின் தலைமைக்கு விசுவாசமாக இருந்தவர், நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர்... இந்தப் பெருமைகளை எல்லாம் கொண்ட பிரணாப் முகர்ஜி, இதே ஆர்.எஸ்.எஸ் பற்றி கடந்தகாலங்களில் சொன்ன கருத்துகள் அனைத்தும் அப்படியே இருக்கின்றன. 

திருச்சி வேலுச்சாமி

இப்போது அவர் ஆர்.எஸ்.எஸ் முகாமில் கலந்துகொண்டது சரி என்றால், கடந்த காலங்களில் ஆர்.எஸ்.எஸ் குறித்து அவர் பேசியதெல்லாம் தவறு. மாறாக கடந்த காலங்களில் அவர் பேசியதெல்லாம் சரி என்று சொன்னால், இப்போது அவர் இந்த முகாமில் கலந்துகொண்டது அயோக்கியத்தனம்!

தேசப் பக்தியைக் காட்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ்-தான் அடையாளமா... இல்லையே! கடைசி காலத்தில், விரக்தியின் விளிம்பு நிலைக்கு பிரணாப் முகர்ஜி வந்துவிட்டார் என்பதைத்தான் அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன. உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் 'இவர் நம்ம ஆள் இல்லை' என்று நேற்றே முடிவெடுத்துவிட்டார்கள்.

'பன்முகத்தன்மையைச் சிதைத்துவிடக் கூடாது என்ற நல்ல விஷயத்தைத்தானே ஆர்.எஸ்.எஸ் முகாமில், அறிவுறுத்தியிருக்கிறார் பிரணாப் முகர்ஜி...' என்று சிலர் சொல்கிறார்கள். எது நல்ல விஷயம்....? சாப்பிடுவதுகூட நல்ல விஷயம்தான்... அதற்காக கக்கூஸில் போய் உட்கார்ந்து சாப்பிட முடியுமா? நல்ல விஷயத்தை, நல்ல இடத்தில் உட்கார்ந்து கொண்டல்லவா சொல்லவேண்டும்! டாஸ்மாக்கில் போய் உட்கார்ந்துகொண்டு, 'யாரும் குடிக்காதீங்க...' என்று சொன்னால் அது சுத்தப் பைத்தியக்காரத்தனம்! 

ஜனாதிபதியாக உச்ச பதவியில் இருந்தபோது பிரணாப் முகர்ஜி சொன்னதெல்லாம் சரி... ஆனால், ஆர்.எஸ்.எஸ்-ஸின் சித்தாந்தம், கொள்கைகள், நடைமுறைகள் அனைத்துமே வேறானவை. ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் ஒரு முடிவோடு செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள். அவர்களது இடத்துக்குப் போய், இவர் உபதேசம் செய்கிறார் என்றால், அவர்கள் மேல் எந்தத் தவறும் இல்லை... இவர்தான் பைத்தியக்காரர்! இவரது கருத்தைக் கேட்டு ஆர்.எஸ்.எஸ்-காரர்களே கைகொட்டிச் சிரிப்பார்கள். கொள்ளைக்கூட்டத்தினருக்கு மத்தியில் போய் நின்றுகொண்டு, 'கொள்ளையடிப்பது தவறு' என்று சொன்னால், அவர்களெல்லாம் சிரிக்காமல் வேறு என்ன செய்வார்கள்?'' என்று குமுறுகிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement