வெளியிடப்பட்ட நேரம்: 18:49 (08/06/2018)

கடைசி தொடர்பு:18:49 (08/06/2018)

தொய்வான நிலையில் இந்தியப் பங்குச் சந்தை!

பலவீனமான தொடக்கத்துக்குப் பின் தொய்வுடனேயே பயணித்து மதியம் மேலும் சரிந்த இந்தியப் பங்குச் சந்தை, பின்னர் சுதாரித்து மெதுவாக தனது நஷ்டங்களைக் குறைத்துக்கொண்டு இன்று வர்த்தக நேரம் முடிகையில் முந்தைய தினத்தின் இறுதி நிலையிலேயே முடிவுற்றது.

மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் இன்று ஒரு கட்டத்தில் 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்திருந்தாலும், இறுதியில் 35,443.67 என்ற நிலையில், 19.41 புள்ளிகள் அதாவது 0.05 சதவிகிதம் மட்டுமே பதிவு செய்து முடிந்தது.

தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்ட்டி 10,767.65 என, ஒரு புல்லுக்கும் குறைவான நஷ்டத்துடன் முடிவுற்றது.

பங்குச் சந்தை

நேற்று அமெரிக்கச் சந்தையிலும், இன்று ஆசிய மற்றும் ஐரோப்பியச் சந்தைகளிலும் நிலவிய மந்தமான போக்கு, இந்தியச் சந்தையிலும் பிரதிபலித்தது.

இன்றும் நாளையும் நடைபெறவிருக்கும் G7 நாடுகளின் உச்சி மாநாட்டில் எடுக்கப்படக்கூடிய முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு, வர்த்தகப் பூசல் பற்றிய கவலை மற்றும் நடைபெறவிருக்கும் அமெரிக்க - வட கொரியா நாடுகளுக்கிடையேயான பேச்சு வார்த்தை, மற்றும் வரும் வாரம் நடக்கவிருக்கும் அமெரிக்க பெடரல் ரிசர்வ், ஐரோப்பிய மதிய வங்கி இவற்றின் மானிட்டரி பாலிசி ஆகியவற்றைக் குறித்த எச்சரிக்கை உணர்வுடன் முதலீட்டாளர்கள் செயல்பட்டதால், உலகச் சந்தைகளில் இத்தகைய தொய்வான நிலை இருந்தது.

டாலருக்கெதிராக இந்திய ரூபாய் சற்று வலுவிழந்து ஒரு வாரத்தில் லோ-வைத் தொட்டதும் இந்தியச் சந்தையில் இன்றைய பலவீனமான போக்குக்குக் காரணமாக இருந்தது.

கடந்த இரண்டு நாள்கள் கண்ட முன்னேற்றத்துக்குப் பின் முதலீட்டாளர்கள் தங்கள் லாபங்களை புக் செய்ய விரும்பியதும் சந்தையின் இன்றைய தொய்வான நிலைக்கு ஒரு காரணம் எனலாம்.

மருத்துவத் துறை பங்குகள் இன்று பெரும்பாலும் நல்ல முன்னேற்றம் கண்டன. ரூபாயின் மதிப்பு குறைந்ததும், பல பெரிய நிறுவனங்களின் மருந்துகளுக்கு அமெரிக்க ட்ரக் ரெகுலேட்டரின் அனுமதி கிடைத்ததும், இத்துறை பங்குகளின் இன்றைய சிறப்பான முன்னேற்றத்துக்கு வழி வகுத்தன.

சில தகவல் தொழில் நுட்பப் பங்குகளும், ஆயில் பங்குகளும் முன்னேற்றம் கண்டன. ஏனைய துறை சார்ந்த பங்குகள் பெரிதளவில் வாங்கப் படவோ அல்லது விற்கப்படவோ இல்லை.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

சன் பார்மா 8%
லூப்பின் 5.4%
டாக்டர் ரெட்டி'ஸ் 4.8%
சிப்லா 3%
அரபிந்தோ பார்மா 4.3%
கேடிலா ஹெல்த்கேர் 2.3%
பஞ்சாப் நேஷனல் பேங்க் 4.9%
ஐடியா செல்லுலார் 4.2%
மரிக்கோ 3.5%
இமாமி 3.3%
கெயில் இந்தியா 2%
பஜாஜ் ஃபைனான்ஸ் 1.85%

விலை இறங்கிய பங்குகள் :

ஹின்டால்கோ  2.5%
பவர் கிரிட் கார்பொரேஷன் 2.4%
பாரத் எலக்ட்ரானிக்ஸ் 2.9%
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 1.3%
பாரத் பெட்ரோலியம்  1.4%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1476 பங்குகள் விலை உயர்ந்தன. 1167 பங்குகள் நஷ்டத்துடனும் 139 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிவடைந்தன.