`8 மாதமாக பென்சன் கிடைக்கவில்லை!’ - பாம்புடன் சென்று அதிகாரியை மிரட்டிய முதியவர்

அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனக்கு வரவேண்டிய பென்சன் தொகை சரியாகக் கிடைக்காததால், மாபு சாபா ரஜேகான் என்ற முதியவர், அரசு அதிகாரிகளிடம் நல்ல பாம்பை காட்டி மிரட்டிய சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.

பென்சன்

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டம் ரோனா கிராமத்தைச் சேர்ந்தவர், மாபு சாபா ரஜேகான். இவர், அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், அரசாங்கம் வழங்கும் பென்சன் தொகையை வைத்து வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையில், ரஜேகானுக்கு தீடிரென தொழு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், தனக்குக் கிடைக்கும் பென்சன் தொகையைக் கொண்டு சிகிச்சை பெற்றும், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தும் வந்துள்ளார். 

இப்படிப்பட்ட, நெருக்கடியான சூழ்நிலையில் கடந்த எட்டு மாதங்களாக மாபு சாபா ரஜேகானுக்கு, பென்சன் தொகை சரிவர கிடைக்கவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் தபால் நிலையத்துக்குப் பலமுறை நேரில் சென்று புகார் அளித்துள்ளார். இருப்பினும், புகார் மீது எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால், மன வேதனையடைந்த மாபு சாபா ரஜேகான் இன்று பென்சன் வழங்கும் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். 

அப்போது, தான் மறைத்து வைத்திருந்த நல்ல பாம்பு ஒன்றை பையிலிருந்து வெளியில் எடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரியை பாம்பை காட்டி மிரட்டியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத, அதிகாரி மற்றும் அறையில் இருந்தவர்கள் உட்பட அனைவரும் அலரி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால், அலுவலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின், அதிகாரிகளிடம் பேசிய ரஜேகான், தனது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். 

இதையடுத்து 3 அல்லது 4 நாள்களில் பென்சன் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி உறுதி அளித்தபின், தான் கொண்டு வந்த பாம்பை பத்திரமாக எடுத்துச் சென்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!