வெளியிடப்பட்ட நேரம்: 08:13 (09/06/2018)

கடைசி தொடர்பு:12:31 (09/06/2018)

`நாங்கள் போராடுவோம், வெற்றி பெறுவோம்’ - ராகுல் காந்தியுடன் ஆர்.ஜே.டி கட்சித் தலைவர் சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் நேற்று முன் தினம் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

ராகுல்

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் நேற்று முன் தினம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் பீகாரில் உள்ள அரசியல் நிலை குறித்தும் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் வரும் தேர்தலுக்கான பிரசாரம், வேட்பாளர்கள், பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் ஆட்சியின் தோல்விகள் போன்றவை குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார். 

இவர்களின் சந்திப்பு குறித்து தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் , “ ராகுல் காந்தியுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது நடைபெறும் ஆட்சி உருவாக்கியுள்ள அச்சமான சூழ்நிலையில் இருந்து நாட்டைக் காப்பாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பாருங்கள்! விவசாயிகளுக்கு, இளைஞர்கள், பெண்கள், ஏழைகளுக்கு என அனைவருக்கும் பயன் தரும் வகையில் ஒரு செயல்திட்டத்துடன் வருவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து மற்றொரு ட்விட்டில், “நாங்கள் இங்கே புதிய அரசை அமைக்க ஒன்று கூடவில்லை. தற்போது நடைபெற்று வரும் சர்வாதிகார ஆட்சியில் இருந்து மக்களைக் காப்பாற்றி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதற்காகவே பேசினோம். இந்தியாவின் அரசியலமைப்பு, மதச்சார்பின்மை,ஜனநாயகம், சமூகத்தின் நீதி ஆகியவற்றைப் பாதுகாக்கவே இணைந்துள்ளோம். நாங்கள் போராடுவோம். வெற்றி பெறுவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.