`வானில் பறக்கும் ஏர் பலூன்...’ - இன்டர்நெட் சேவையைப் பெறும் மலைக் கிராம மக்கள்

இந்தியாவில் தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்கிறது. இதை, உறுதி செய்யும் வகையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலைக் கிராமங்களில் வாழும் மக்களுக்கு பலூன் மூலம் இன்டர்நெட் சேவைகள் வழங்கப்பட உள்ளன.

ஏர் பலூன்

இந்தியாவில் உள்ள தொலைதூரக் கிராமங்களிலும் மலைப்பிரதேசங்களிலும் செல்போன் டவர்களை அமைப்பதில் இன்றளவிலும் சிக்கல் நீடித்துதான் வருகிறது. இதனால், நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் சேவைகளை, மலைவாழ் கிராம மக்கள் உபயோகிக்க முடியாமல் போகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில், முதற்கட்ட முயற்சியாக உத்தரகாண்ட் மாநிலத்தில், காற்றில் பறக்கும் ஏர் பலூன் மூலம் இன்டர்நெட் இணைப்பு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட்டில் உள்ள இமயமலைப் பகுதியில் சுமார் 16,870 கிராமங்கள் உள்ளன. இதில், 680 கிராமங்களில் இன்டர்நெட் மற்றும் செல்போன் இணைப்புகள் இல்லை. இதனால், நாட்டிலேயே முதல்முறையாக, ஏர்பலூன் மூலம் இன்டர்நெட் சேவை வசதிகளைப் பெறும் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ரவத் டேராடூனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தொடங்கி வைத்தார். 

இந்த ஏர் பலூன் ஏரோஸ் டாட் டெக்னாலஜி முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. 6 மீட்டர் நீளம் கொண்ட பலூனில் நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டுள்ளது. தரையிலிருந்து ரிமோட் மூலம் இயக்கக்கூடிய ஏர் பலூனில், டிரான்ஸ்ரிசீவர் ஆன்டெனா கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இந்தக் கருவியில் இன்டர்நெட் சேவை வழங்கக்கூடிய மோடம் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், 7.5 கி.மீ சுற்றளவு வரை உள்ள கிராமங்களில் வைஃபை வசதி மூலம் செல்போன் மற்றும் இன்டர்நெட் இணைப்புகள் கிடைக்கும் வகையில் ஏர் பலூன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு, ரூபாய் 50 லட்சம் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!