`இந்தியா தொழுநோய் இல்லாத நாடாக மாறும்' - மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா! | India will be free of leprosy this year, says JP Nadda

வெளியிடப்பட்ட நேரம்: 04:15 (10/06/2018)

கடைசி தொடர்பு:04:15 (10/06/2018)

`இந்தியா தொழுநோய் இல்லாத நாடாக மாறும்' - மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா!

இந்த ஆண்டுக்குள் இந்தியா முற்றிலும் தொழுநோய் இல்லாத நாடாக மாறும் என  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

ஜே பி நட்டா

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோரைத் தாக்கி உருக்குலைத்து முடக்கும் கொடிய நோய் தொழுநோய். காசநோயைப் போன்று இதுவும் இருமல், தும்மல் மூலமாகப் பரவக்கூடிய நோய். நமைச்சல், தேமல் எனத் தோலில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும், கை, கால்கள் அடிக்கடி உணர்ச்சிகளற்று மரத்துப்போனாலும், உடனடியாக மருத்துவரை சந்தித்துப் பரிசோதனை செய்யவேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை, சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நோய்க்குக் காற்றிலும் பரவும் தன்மை இருப்பதால் இந்திய அரசு 1955-ல் இதை ஒழிக்க முடிவு செய்து,  பின்னர், 1983-லிருந்து ஜனவரி 30-ம் தேதி காந்தி நினைவு நாள் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ( WHO) வரையறையின்படி, 10 ஆயிரத்தில் ஒருவருக்குப் பாதிப்பு இருப்பதுதான், ஒரு நாட்டில் தொழுநோய் குறைந்துவிட்டதற்கான குறைந்தபட்ச மதிப்பீடாகக் கருதப்படுகிறது. 

இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா,  ``இந்த ஆண்டுக்குள் இந்தியா முற்றிலும் தொழுநோய் இல்லாத நாடாக மாறும். தொழுநோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அடுத்த வருடத்திற்குள் கலா அசார் எனப்படும் கருங்காய்ச்சல் இல்லாத நாடாக இந்தியா மாறும். இந்தியாவில் தற்போது இறப்பு விகிதம் குறைந்துள்ளது.  உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி, குழந்தைகளுக்கு ஏற்படும் டெட்டனஸ், மன அழுத்தம் மற்றும் மேலும் சில நோய்களும் குறைந்துள்ளது" என்றார். முன்னதாக அவரிடம் உத்தரபிரதேசத்தில் சுகாதாரத்துறை பின்தங்கியுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த நட்டா, பாஜக ஆட்சியில் பல்வேறு சுகாதார திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றின் செயல்பாடுகள் தெரிய சில காலங்கள் ஆகும்" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க