வெளியிடப்பட்ட நேரம்: 08:13 (10/06/2018)

கடைசி தொடர்பு:08:13 (10/06/2018)

இந்தியர்களின் வளைகுடா 'தேன்நிலவு' முடிவுக்கு வந்துவிட்டதா?!

இனிமேல் வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் பணி புரிவது கடினமாகியுள்ளது.

இந்தியர்களின் வளைகுடா 'தேன்நிலவு' முடிவுக்கு வந்துவிட்டதா?!

`திரைக்கடல் ஓடி திரவியம் தேடு'. தமிழர்களுக்கு இந்தப் பொன்மொழி என்றால், `வளமாக வாழ வளைகுடாவை நாடு' என்கிற வாசகம் இந்தியர்களுக்கு முற்றிலும் பொருத்தமானது. நடுத்தர  வர்க்கத்தைச் சேர்ந்த  இந்திய இளைஞர்களுக்கு கல்ஃப் வேலைதான் கனவாக இருக்க முடியும். `கடனை கிடனை வாங்கியாவது கல்ஃப் போயிடணும்' என்ற நினைப்பிலேயே  படிக்கும் இளைஞர்களும் அநேகம். வளைகுடா நாடுகளும் இந்தியர்களை ஏமாற்றியதில்லை. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான `கருவூலம்' வளைகுடா நாடுகள்தான். தமிழகம், கேரளா என சில நகரங்கள் மட்டும் செல்வச் செழிப்பில் கொழிக்கும். கூர்ந்து கவனித்தால், அந்த நகரங்களில் பெரும்பாலானோர் வளைகுடா நாடுகளில் பணிபுரிவார்கள். வளைகுடா பணம் அங்கே விளையாடிக்கொண்டிருக்கும். 

uae

இந்திய வெளியுறவுத் துறை புள்ளிவிவரப்படி, 85 லட்சம் இந்தியர்கள் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்றனர்.  நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 2.77 லட்சம் பேர் இந்த நாடுகளைவிட்டு வெளியேறி வேறு வேலைகளைத் தேடத் தொடங்கியுள்ளதுதான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமீரகத்திலிருந்து மட்டும் அதிகபட்சமாக 1.10 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர். சவுதி - 59,911, ஓமன் - 42,095, குவைத் - 40,010, பஹரைன் - 7,591 என பட்டியல் நீள்கிறது. கத்தார் நாட்டில் மட்டும் 8.50 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். 2022-ம் ஆண்டு இங்கு உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக கட்டுமானப் பணிகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் ஈடுபட்டுவருகின்றனர். கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததும்  கத்தார் நாட்டிலும் இந்தியர்கள் பணி இழக்கும் அபாயம் உள்ளது. 

எண்ணெய் வர்த்தகத்தை மட்டுமே நம்பியிருப்பது சரியாகாது என்பதை அந்நாட்டு அரசுகள் உணர ஆரம்பித்து, வரி வருவாயை அதிகரிக்கும் முடிவுக்கு வந்ததே இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பணியாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளில் மக்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு குறைவாகவே இருக்கும். ஆனால் கடந்த இரு ஆண்டுகளில் புதியதாக ஏராளமான வரிகள் விதிக்கப்படுகின்றன. அதன் உச்சகட்டமாக  சவுதி அரேபியாவில் `Residence Fee' என்ற பெயரில் அந்த நாட்டில் வசிக்க தனிக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சவுதியில் குடும்பத்தோடு வசித்ததால் செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது. இதன் விளைவு, முதலில் ஹைதராபாத் நகரில்தான் எதிரொலித்தது. திடீரென ஹைதராபாத் பள்ளிகளில் வளைகுடா நாடுகளில் வசித்துவந்த குழந்தைகள் சேர்க்கை அதிகமானது. அதிக வரிவசூலிப்புக் காரணமாக சவுதியில் குடும்பத்தோடு வசிக்க முடியாத நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை தாய்நாட்டுக்கு அனுப்பிவைத்துவிடும் போக்கு இந்தியர்களிடையே அதிகரித்துள்ளது. 

கடந்த 30 வருடமாக சவுதியில் வசித்து ஹைதராபாத் திரும்பியுள்ள முகமது பக்கர், ``சவுதியில் இனிமேல் குடும்பத்தோடு வசிப்பது சாத்தியமல்ல. அதற்கென்றே மிகப்பெரிய தொகையை வரியாகக் கட்டவேண்டியுள்ளது. இதுதவிர, வீட்டு வாடகை, உணவு, பள்ளிச் செலவுகளைச் சமாளிக்க முடியாத சூழல் அங்கு காணப்படுகிறது'' என்று கூறுகிறார். 

உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்குக் கூடுதல் வரிவிதிப்பை சவுதி அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு முன், சவுதி நிறுவனங்களில் வெளிநாட்டு ஊழியர்கள் பணிபுரிந்தால் ஓர் ஊழியருக்கு மாதம் 200 ரியால் வரியாக நிறுவனங்கள் செலுத்த வேண்டும். நடப்பாண்டில் இந்த வரி  400 ரியால்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊழியர்களுக்கு இணையாக சவுதி மக்களும் பணிபுரியும் நிறுவனங்களில் ஓர் ஊழியருக்கு 300 ரியால்கள் செலுத்தினால் போதுமானது.

சவுதி அரேபியா, எண்ணெய் வர்த்தகத்தால் பெரும்வருவாய் ஈட்டுகிறது. ஆச்சர்யப்படுத்தும்விதத்தில் 2018-ம் ஆண்டு முதல் காலாண்டில் எண்ணெய் வர்த்தகம் தவிர்த்து பிற வரி வருவாய் மட்டும் 63 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக அங்கு மதிப்புக் கூட்டுவரியும் விதிக்கப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது. 

2016-ம் ஆண்டு இந்தியாவுக்குக் கிடைத்த மொத்த  அந்நியச் செலாவணி 62.7 பில்லியன் அமெரிக்க டாலர். இதில், 35 சதவிகிதம் வளைகுடாவாழ் இந்தியர்கள் வழியாகக் கிடைத்தது. கடந்த ஆண்டு  அந்நியச் செலாவணி 9 சதவிகிதம் சரிவுகண்டுள்ளது. சவுதியில் பெண்களுக்கும் கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளடைவில் பெரும்பாலான இந்திய ஓட்டுநர்கள் வேலை இழக்கும் அச்சத்தில் இருக்கின்றனர். கிட்டத்தட்ட இந்தியர்களின் `அரேபிய தேன்நிலவு' முடிவுக்கு வந்துவிட்டது என்றே பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்