வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (10/06/2018)

கடைசி தொடர்பு:19:00 (10/06/2018)

`பிரதமர் வேட்பாளராக பிரணாப்பை முன்னிறுத்தும் ஆர்.எஸ்.எஸ்!’ - பகீர் கிளப்பும் சிவசேனா

பிரதமர் வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை முன்னிறுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளதாக சிவசேனா கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது. 

பிரணாப்

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறைப்புரையாற்றினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அழைப்பை ஏற்றுக்கொண்டது முதலே பிரணாப் முகர்ஜிக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. விமர்சனங்களைக் கடந்து நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரணாப் முகர்ஜி, தேசியவாதம், தேசியம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து பேசினார். மதரீதியான வேறுபாடு, வெறுப்பு உணர்வு ஆகியவை நாட்டின் ஒற்றுமையைச் சிதைத்துவிடும் என்று குறிப்பிட்ட பிரணாப், வேற்றுமையில் ஒற்றுமை காணுவதே நமது நாட்டின் சிறப்பு என்று பேசினார். அவரது பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேபோல், பா.ஜ.க தரப்பில் பிரணாப் முகர்ஜியை, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பாராட்டினார். நாட்டின் சமகால வரலாற்றில் இந்த நிகழ்வு முக்கியமானது என அவர் குறிப்பிட்டிருந்தார். 

இந்தநிலையில், பிரதமர் வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை முன்னிறுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டிருப்பதாக சிவசேனா கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அக்கட்சியின் சஞ்சய் ராவத், ``வரும் 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போதுமான இடங்களில் பா.ஜ.க வெற்றிபெறவில்லை என்றால், பிரதமர் வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை ஆர்.எஸ்.எஸ் முன்னிறுத்தும் என நினைக்கிறோம்’’ என்றார். இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க பெறாது என்பதே நிதர்சனம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா கட்சியை மீண்டும் கூட்டணியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவைப் பா.ஜ.கவின் தேசியத் தலைவர் அமித் ஷா மும்பையில் சமீபத்தில் சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.