வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (11/06/2018)

கடைசி தொடர்பு:07:06 (11/06/2018)

டாக்டர் கஃபீல்கான் சகோதரர் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு - உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு!

கடந்த ஆகஸ்ட் மாதம், ஆக்ஸிஜன் சப்ளை குறைபாட்டால் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் பல மரணித்தன. நாட்டை உலுக்கிய இந்தக் கோர சம்பவத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட மருத்துவர் கஃபீல் கானின் தம்பி காஷிஃப் கான் ஆடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். 

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள, பாபா பகவான்தாஸ் அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் மாதம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை காரணமாக 70 குழந்தைகள் இறந்தன. மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கையில், ``அன்று பொறுப்பு மருத்துவராய் இருந்திருக்கவேண்டிய மருத்துவர். கஃபீல்கான் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளுக்குட்பட்டு செயல்படவில்லை. ஆகஸ்ட் 11-ம் தேதி முறையான அனுமதி பெறாமல் விடுப்பில் சென்றிருக்கிறார். ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து முறையான தகவலை  உயர் அதிகாரிகளுக்கு அளிக்கவில்லை'' எனக் கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து கஃபீல்கான் கைதுசெய்யப்பட்டார். இதனால் சர்ச்சை எழுந்தது. ஆனால், குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்தபோது, டாக்டர் கஃபீல்கான் தனது சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கிப் பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார் எனக் கூறப்படுகிறது. எனினும், கடந்த ஏப்ரல் மாதம் சம்பவத்தன்று நடந்த நிகழ்வுகளைப் பட்டியலிட்டு அவர் விளக்கக் கடிதம் ஒன்றை அளித்தார். அந்த கடிதத்தில் மேல் அதிகாரிகளின் நிர்வாகக் கோளாறே இந்த நிகழ்வுக்குக் காரணம். அவர் அளித்த விளக்கக் கடித்ததை தொடர்ந்தும் அவர்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவர் பிணையில் கடந்த மாதம் ரிலீஸ் செய்யப்பட்டார்.  

கஃபில் கான் சகோதரர்

இந்நிலையில், நேற்று இரவு (ஜுன் 10)  கோரக்பூர் நகரில் மருத்துவர் கஃபீல்கானின்  தம்பி காஷிஃப்  கான்  அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். கழுத்து, கை, கன்னம் என மூன்று இடங்களில் குண்டடிப்பட்ட காஷிஃப் கோரக்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய கஃபீல் கான் ``பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவரால் எனது சகோதரர் சுடப்பட்டுள்ளார். எங்களைக் கொன்று விடுவார்கள் என்று ஏற்கெனவே நான் கூறியது தான்" எனக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர். 

கோரக்பூர்