வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (11/06/2018)

கடைசி தொடர்பு:17:18 (11/06/2018)

`பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க இதைச் செய்யுங்கள்!’ - ப.சிதம்பரம் யோசனை

அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் யோசனை தெரிவித்திருக்கிறார்.

ப.சிதம்பரம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் தினசரி விலை நிர்ணயம் செய்து வரும் முறையை மாற்றி பழையபடி, பெட்ரோல், டீசல் விலையை அரசே நிர்ணயிக்கும் முறையைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்து வருகிறது. ஆனால், தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை பரிசீலிக்கும் எண்ணம் இல்லை எனப் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். அதேபோல், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் கீழ் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்து வருகின்றன. 

இந்தநிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி விதிப்பின்கீழ் கொண்டுவந்தால், அவற்றின் விலை உடனடியாகக் குறைய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், ‘பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி விதிப்பின்கீழ் கொண்டுவரும் விவகாரத்தில் மாநில நிதியமைச்சர்கள் கேட்டு முடிவெடுப்பது சரியாக இருக்காது. நாடு முழுவதும் 19 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கும்போது, இந்த விவகாரத்தில் மாநில நிதியமைச்சர்கள் மீது குறைகூறுவது ஏன். ஜி.எஸ்.டி வரி விதிப்பின்கீழ் பெட்ரோல், டீசலைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் லிட்டருக்கு ரூ.25 வரை விலையைக் குறைக்க வாய்ப்பு ஏற்படும். ஜி.எஸ்.டி-யின் கீழ் அவை கொண்டுவரப்பட்டால், உடனடியாக விலை குறையும். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான விலையேற்றம் குறித்து மக்களிடையே கோபம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மே - ஜூன் மாதங்களில் இருந்ததைவிட அவற்றின் விலை அதிகமாக இருப்பதற்கான எந்தக் காரணமும் இல்லை. இது நுகர்வோரின்மீது கடும் சுமையை ஏற்றும்’’ என்று தெரிவித்தார்.