வெளியிடப்பட்ட நேரம்: 19:21 (12/06/2018)

கடைசி தொடர்பு:19:21 (12/06/2018)

சந்தையில் உற்சாகமான மனநிலை காரணமாக, சென்செக்ஸ், நிஃப்ட்டி இன்று நல்ல முன்னேற்றம் 

சர்வதேசச் சந்தைகளில் காணப்பட்ட சற்றே பாசிட்டிவான மனநிலை காரணமாகவும், இன்று வெளிவரவிருக்கும் பொருளாதார அறிக்கைகள் ஓரளவு திருப்திகரமாக அமையலாம் என்ற நம்பிக்கையும், இந்தியப் பங்குச் சந்தையில் ஒரு நல்ல முன்னேற்றத்துக்கு இன்று வழி வகுத்தது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் - வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன் சந்திப்பு மூலம் பூகோள அரசியலில் ஒரு சுமுக நிலை உருவாகலாம் என்ற நிலையை ஏற்படுத்தியிருப்பதும் சந்தையின் ஏறுமுகத்துக்குக் காரணமாக இருந்தது என்று கூறலாம். 

மும்பை பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் 209.05 புள்ளிகள் அதாவது 0.59 சதவிகிதம் உயர்ந்து 35,692.52 என முடிந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்ட்டி குறியீடு 55.90 புள்ளிகள், அதாவது 0.52 சதவிகிதம் லாபத்துடன் 10,842.85-ல் முடிந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன் இவர்களின் சந்திப்புக்குப் பின் கையெழுத்தாகியிருக்கும் உடன்படிக்கை கொரிய தீபகற்பத்தில் ஒரு சுமுகமான நிலை உருவாக வித்திடும் என்ற நம்பிக்கையில், ஆசியச் சந்தைகள் பெரும்பாலும் முன்னேற்றம் கண்டன.

ஐரோப்பாவின் முக்கியச் சந்தைகள், அவ்வளவாக திருப்திகரமாக இல்லாத ஜெர்மன் பிசினஸ் கான்ஃபிடென்ஸ் அறிக்கை காரணமாக, பெரிதளவான ஏறுமுகமோ அல்லது இறங்குமுகமோ காணாமல், ஒரு கலப்படமான நிலையில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. 

இன்று வெளிவரவிருக்கும் ரீடைல் பணவீக்கம் மற்றும் தொழில் உற்பத்தி பற்றிய புள்ளி விவரங்கள் குறித்த எதிர்பார்ப்பு காரணமாக ஒரு பெரிய தயக்கம் எதுவும் இல்லாமல், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் செலுத்தியதைக் காண முடிந்தது.

கேப்பிடல் கூட்ஸ், மருத்துவம் மற்றும் வங்கித் துறை பங்குகள் முன்னேற்றம் கண்டன. தகவல் தொழில் நுட்பம் மற்றும் எப்.எம்.சி.ஜி துறை பங்குகள் சிலவும் நல்ல முன்னேற்றம் கண்டன.

இன்று விலை உயர்ந்த சில முக்கியப் பங்குகள் :

லூப்பின்   6.4%
டாக்டர் ரெட்டி'ஸ் 5.4%
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 3.7%
இந்தஸ்இந்த் பேங்க் 2.5%
ஹிந்துஸ்தான் யூனிலீவர்  2.5%
ஹீரோ மோட்டோகார்ப்  2.3%
அதானி போர்ட்ஸ் 2%
அரபிந்தோ பார்மா 3.5%
கேடிலா ஹெல்த்கேர் 3.4%
ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் 3.2%
ஐடியா செல்லுலார் 2.8%
ஸ்டீல் அத்தாரிட்டி 2.7%
ஆசியா பிரவுன் பௌவேரி 2.7%
சன் டிவி 2.5%
 

விலை இறங்கிய பங்குகள் :

பார்தி ஏர்டெல்  2.1%
டாடா ஸ்டீல் 1.5%
ஹின்டால்க்கோ 1.6%
ஸ்ரீ சிமென்ட் 2.9%
மரிக்கோ 2.2%

இன்று மும்பைப் பங்குச் சந்தையில் 1441 பங்குகள் விலை உயர்ந்தன. 1222 பங்குகள் நஷ்டத்துடனும் 143 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிவடைந்தன.