வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (12/06/2018)

கடைசி தொடர்பு:21:30 (12/06/2018)

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண் இணைப்பு! - மத்திய அரசின் அடுத்த அதிரடி?

சாலையில் விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் வாகன ஓட்டிகளைப் பிடிக்க, லைசென்ஸ் உடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான திட்டத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது. `விபத்தை ஏற்படுத்திவிட்டு வேறு மாநிலத்துக்குத் தப்பி ஓடும் நபர்களைப் பிடிப்பதற்கு இது ஒன்றுதான் ஒரே வழி' என்கின்றனர் சாலைப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள். 

ஓட்டினர் உரிமம்

மத்தியில் பா.ஜ.க அரசு அமைந்ததிலிருந்து, ஆதார் திட்டத்தை முழுவீச்சுடன் செயல்படுத்தி வருகிறது. ஆதாருக்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், அரசின் திட்டங்களைப் பெறுவதுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான முயற்சிகள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டம் மற்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், `மது போதையுடன் சாலைகளில் வாகனங்களை ஓட்டிச் சென்று அப்பாவி மக்களைக் கொன்று விட்டு, வேறு மாநிலத்துக்குத் தப்பி ஓடிவிடுகின்றனர். அதுவே, ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளியை எளிதில் பிடித்துவிட முடியும். ஒருவர் தன்னுடைய பெயரை மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், கை ரேகையை மாற்ற முடியாது. ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்' என்றார்.