வெளியிடப்பட்ட நேரம்: 08:09 (13/06/2018)

கடைசி தொடர்பு:08:09 (13/06/2018)

6 நாடுகள்.. 6 வரலாற்றுச் சந்திப்புகள் ட்ரம்ப்-கிம்முக்கு டஃப் கொடுக்கும் மோடி!

ட்ரம்ப்-கிம் சந்தித்தது இன்றைய தலைப்புச் செய்தி என்றால் பாகிஸ்தானுக்கே சென்று பாகிஸ்தான் பிரதமரை ஒருமுறையும், மொத்தமாக 6 நாடுகளில் 6 முறை சந்தித்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் மோடி

6 நாடுகள்.. 6 வரலாற்றுச் சந்திப்புகள் ட்ரம்ப்-கிம்முக்கு டஃப் கொடுக்கும் மோடி!

எதிரி நாடுகளாகக் கருதப்படும் வடகொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் அதிபர்களும் கைகுலுக்கிக் கொண்டதுதான் இன்று உலகமெங்கும் தலைப்புச் செய்தி. இந்தியப் பிரதமர் மோடியின் நான்காண்டு கால ஆட்சியில் 6 முறை இதுபோன்ற தலைப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆம்! இந்தியா-பாகிஸ்தான் என்றவுடன் நம் நினைவுக்கு வருவதெல்லாம் எதிரி நாடுகள், யுத்தமாகவே பார்க்கப்படும் கிரிக்கெட் போட்டிகள், துப்பாக்கிச் சூடுகள் ஆகியவைதாம். அப்படிப்பட்ட இரண்டு நாடுகளின் தலைவர்கள் கைகுலுக்கிச் சிரித்துக் கொண்டால் அது அந்நாளின் தலைப்புச் செய்திதானே! இந்த 48 மாத ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் உடன் 5 முறை கைகுலுக்கிச் சந்தித்துள்ளார் மோடி. இதில் மிகச் சிறப்பான சந்திப்பு என்றால், அது பாகிஸ்தானிலேயே சென்று நவாஸ் ஷெரிஃபை சந்தித்ததுதான். காரணம், 2004ம் ஆண்டுக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து இந்தியப் பிரதமர் பாகிஸ்தானுக்கே சென்று அந்நாட்டு பிரதமரைச் சந்தித்ததுதான்.

பிரதமர் மோடி பாகிஸ்தான் தலைவர்களைச் சந்தித்த அந்த 6 நிகழ்வுகள் இதோ...

2014, மே - பிரதமர் மோடி பதவியேற்பு விழா, டெல்லி :

மோடி

2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியடைந்து பிரதமராகப் பதவியேற்றார் நரேந்திர மோடி. அந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு மோடியிடம் முதல் ஆளாகக் கைகுலுக்கிக் கொண்டவர் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப். பிரதமர் அரியணை ஏறும் முன்னரே அரங்கேறிய பாகிஸ்தான் அதிபருடனான இந்தச் சந்திப்பு, சமூக வலைதளங்களில் மோடி அரசுக்கு நற்பெயரை வாங்கித்தந்தது. 

பதவியேற்புக்கு அடுத்த நாளே, டெல்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் இரு நாட்டுப் பிரதமர்களும் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். இந்தச் சந்திப்பில், 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு நாடுகளின் வெளியுறவுத் துறைச் செயலாளர்கள் சந்திப்பு, மீண்டும் தொடர வழிவகுக்கப்பட்டது. மேலும், இந்திய மண்ணுக்கு எதிராக பாகிஸ்தானில் நடைபெறும் தீவிரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், 26/11/2008 அன்று மும்பை தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் விசாரணையை வேகப்படுத்தவும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபிடம் வலியுறுத்தினார் மோடி.

 2015, ஜூலை- ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, ரஷ்யா :

மோடி

இம்முறை ரஷ்யாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபும் சந்தித்துக் கொண்டனர். நீண்ட கைகுலுக்கலுடன் இருவரும் நலம் விசாரித்துக்கொண்டனர். பின்னர் இரு நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களும் ``அனைத்துத் தீவிரவாத பிரச்னைகள் குறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும்"என்று ஒப்பந்தம் போடப்பட்டது.

2015, நவம்பர் - 21வது ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு, பாரீஸ் :

நான்கு மாதங்கள் கழித்து பாரீஸில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் மீண்டும் மோடி-ஷெரிஃப்  சந்திப்பு நடைபெற்றது. அப்போது கைகுலுக்கிக்கொண்ட இருவரும் நன்றாகப் பேசிக்கொண்டனர். இது ஒரு கவனம் ஈர்க்கும் சந்திப்பாக அமைந்தது. காரணம். இரு நாட்டுத் தலைவர்களும் அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் எவரும் அருகில்லாதபோது அங்குள்ள சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டனர். இந்தச் சந்திப்புக்குப் பின் ஷெரிஃப், ``இது வெறும் நட்பு ரீதியான சந்திப்பு" என்று கூறினார்.

2015, டிசம்பர் - நவாஸ் ஷெரிஃப், பாகிஸ்தான் :

இம்முறை நடைபெற்ற மோடி-ஷெரிஃப் சந்திப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கும், ஆஃப்கானிஸ்தானின் காபுல் நகருக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, திடீரெனத் தன் பயணப் பட்டியலில் இல்லாத பாகிஸ்தானின் லாகூர் நகருக்குச் சென்றார். அங்கு அன்று பிறந்தநாள் கொண்டாடிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபைக் கட்டித்தழுவி தன் வாழ்த்துகளைக் கூறினார் மோடி.

modi

கடந்த 70 வருடங்களில், இந்தியப் பிரதமர்கள் 7 முறை பாகிஸ்தான் சென்றுள்ளனர். மோடியின் இந்தப் பாகிஸ்தான் பயணம் 8வது முறையாகும். மேலும் 2004ம் ஆண்டுக்குப் பிறகு 11 வருடங்கள் கழித்து இந்தியப் பிரதமர் ஒருவர் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டது இதுவே முதல்முறை எனப் பல சிறப்புகள் இந்தப் பாகிஸ்தான் சந்திப்புக்கு உண்டு.

2017, ஜூன் - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு,  கஜகஸ்தான் :

2016 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உரி நகரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, `சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' என்ற பெயரில் இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் இரண்டு நாடுகளுக்குமிடையே பதற்ற நிலை நிலவியது. அதன் பிறகு நடந்ததுதான் இந்த கஜகஸ்தான் சந்திப்பு. கஜகஸ்தானின் உள்ள அஸ்டானா நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இருவரும் கலந்துகொண்டனர். மோடி மற்றும் ஷெரிஃப் இருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்துக்கொண்டனர். அங்கு அரசியல் ரீதியாக எந்த ஒரு விஷயமும் விவாதிக்கப்படவில்லை. அப்போது இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த நவாஸ் ஷெரிஃபின் உடல் நிலையை மட்டும் விசாரித்துத் தெரிந்துகொண்டார் மோடி.

modi

2018, ஜூன் -  ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, சீனா :

சீனாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் மம்னூன் ஹூசைனுடன் கைகுலுக்கி நலம் விசாரித்துக்கொண்டார் மோடி.

வரலாற்றில் எப்போதெல்லாம் இரண்டு எதிரி நாடுகளாகப் பார்க்கப்படும் நாடுகளின் தலைவர்கள் கைகுலுக்குகிறார்களோ... அப்போதெல்லாம் எங்கோ ஒரு மூலையில் அமைதிக்கான நம்பிக்கை சிறிது விதைக்கப்படுகிறது.. அது ட்ரம்ப்போ, கிம்மோ..மோடியோ.. அமைதி நிலவினால் மகிழ்ச்சிதான். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்