ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஸ்டிரைக் - இரண்டாவது நாளாக ஆளுநர் மாளிகையில் கெஜ்ரிவால் தர்ணா!

கவர்னர் மாளிகையில் அமர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

கெஜ்ரிவால்

தலைநகர் டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதில் மாநில அரசை நடத்தி வரும் கெஜ்ரிவாலுக்கும், மத்திய அரசின் பிரதிநிதியான துணைநிலை ஆளுநருக்கும் எப்போதும் மோதல் இருந்துகொண்டே இருக்கிறது. அது பழைய ஆளுநர் நஜிப் ஜங்காக இருந்தாலும் சரி, தற்போதைய ஆளுநர் அனில் பைஜாலாக இருந்தாலும் சரி. இதனால் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி தொடர்ந்து ஆம் ஆத்மி குரல்கொடுத்து வருகிறது. இதை வலியுறுத்தி மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்நிலையில்தான் சமீபத்தில் ரேஷன் பொருள்களை வீடு தேடிச் சென்று வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை டெல்லி முதல்வர் முதல்வர் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். ஆனால், கெஜ்ரிவாலின் இத்திட்டத்தைச் செயல்படுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மறுப்பதுடன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அம்மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது என்பதால், இதுகுறித்து பைஜாலை நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக சிசோடியா உள்ளிட்ட தனது அமைச்சரவை சகாக்களுடன் கெஜ்ரிவால் நேற்றுமுன்தினம் கவனர் மாளிகை சென்றார். ஆனால், அவர்களைச் சந்திக்க ஆளுநர் பைஜால் நேரம் ஒதுக்கவில்லை. இதனால், ஆளுநர் எங்களைச் சந்திக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனக் கூறி கெஜ்ரிவால் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். இரண்டு நாள்கள் ஆகியும் அவர் தர்ணா போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார். ஆளுநர் மாளிகையைச் சுற்றி ஆம் ஆத்மி தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!