வெளியிடப்பட்ட நேரம்: 08:42 (13/06/2018)

கடைசி தொடர்பு:08:46 (13/06/2018)

பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பிடித்த காவலரின் சேவை!

ரயில் நிலையங்களில் சுற்றிய குழந்தைகளுக்கு உதவிய பெண் காவலர் ரேகா மிஸ்ரா பற்றிய பாடம் மகாராஸ்ட்ரா 10-ம் வகுப்பு புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 

காவலர்

மகாராஸ்ட்ரா மாநிலத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருபவர் 32 வயதான பெண் காவலர் ரேகா மிஸ்ரா. முதன் முதலில் அலகாபாத் ரயில்வே நிலையத்தில் இருந்த இவர் தற்போது சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் மகாராஸ்ட்ராவில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த குழந்தைகள் என சுமார் 1,150 குழந்தைகள் மீட்கப்பட்டன. அவர்களில் 434 குழந்தைகள்  தங்களின் பெற்றோர்களுடன் சேர ரேகா உதவினார். மற்ற குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உணவு கல்வி போன்ற விஷயங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார். இதேபோன்று 2017- வருடம் 500 குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் சேர்த்தார். மிஸ்ராவின் இந்தச் செயலை அனைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வெகுவாக பாராட்டின. மேலும், அரசு மற்றும் அமைச்சர்களும் இவருக்குப் பாராட்டு மழை பொழிந்தன.

இந்நிலையில், இந்த வருடம் மகாராஸ்ட்ரா மாநிலத்தின் 10-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இவரைப் பற்றிய தகவல்கள் பாடங்களாக இடம் பெற்றுள்ளது. இதுகுறித்துப் பேசிய ரேகா மிஸ்ரா, ``நான் இதுவரை 953 குழந்தைகளுக்கு உதவியுள்ளேன். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காகத் தினமும் நாங்கள் செய்யும் செயல்கள் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பாடப் புத்தகத்தில் எங்களின் செயல் இடம் பெற்றதன் மூலம் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது பற்றி தெரிந்துகொள்ள முடியும்.” எனக் கூறினார்