`என் மாநிலத்தின் ஃபிட்னஸ் பற்றிதான் கவலை’ - மோடி சவாலுக்கு குமாரசாமி பதிலடி

பிரதமர் மோடி கூறிய ஃபிட்னஸ் சேலஞ்சுக்கு பதிலளித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

குமாரசாமி

உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கடந்த மாதம் ஃபிட்னஸ் சேலஞ்ச் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அதன்படி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பிரதமர் மோடிக்கு ஃபிட்னஸ் சவால் விடுத்திருந்தார். இதை ஏற்ற மோடி. `விரைவில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிடுவேன்' எனக் கூறியிருந்தார். 

இன்று காலை, தான் உடற்பயிற்சி செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் மோடி. மேலும், கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா ஆகிய இருவரும் இதே போன்று ஃபிட்னஸ் வீடியோவை வெளியிட வேண்டும் எனச் சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில் மோடியின் சவாலுக்கு பதிலளித்துள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, “அன்புள்ள பிரதமர் அவர்களே, என் உடல் நலன் பற்றி கவலை கொண்டதற்கு மிக்க நன்றி. எனக்கும் உடற்பயிற்சிமீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். யோகா, ட்ரட்மில் போன்ற பயிற்சியை நான் தினமும் செய்து வருகிறேன். என்னைவிட என் மாநிலத்தின் ஃபிட்னஸ் மீதான கவலை எனக்கு அதிகமாக உள்ளது. அதற்கு உங்கள் உதவி தேவை” எனப் பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!