கர்நாடகா இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரை வீழ்த்திய காங்கிரஸ் பெண் வேட்பாளர்!

கர்நாடகா மாநிலம் ஜெயா நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டி, 3775 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.

காங்கிரஸ்

கர்நாடக சட்டசபைத் தேர்தல், கடந்த மே 12-ம் தேதி நடந்து முடிந்தது. இதில், அதிக இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியாமல்போனது. ஆனால், 37 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர், ஜெயா நகர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பி.என்.விஜயகுமார், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதனால், அந்த ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், ஜெயா நகர் தொகுதிக்கு மட்டும் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், கர்நாடக முன்னாள் உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள் சௌமியா ரெட்டி காங்கிரஸ் சார்பிலும், மறைந்த விஜயகுமாரின் சகோதரர் பிரக்லாத்,  பா.ஜ.க சார்பிலும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக மதச்சார்பற்ற ஜனதாதளம் அறிவித்திருந்தது. 

இன்று காலை தொடங்கிய இந்தத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை, நண்பகல் 12 மணி வரை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்துவந்தது. ஓட்டு எண்ணிக்கையின் முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா  54,045 வாக்குகள் பெற்று 3,775 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளரை வீழ்த்தினார். பா.ஜ.க வேட்பாளர் 50,270 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஜெயா நகர் தொகுதியின் வெற்றியைத் தொடர்ந்து, கர்நாடகா காங்கிரஸின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!