வெளியிடப்பட்ட நேரம்: 19:42 (13/06/2018)

கடைசி தொடர்பு:19:42 (13/06/2018)

'என் உரிமையைப் பாதுகாக்க, இரான் போட்டியில் கலந்துகொள்ள மாட்டேன்!' செளம்யா சுவாமிநாதன்

பிரபல சதுரங்க விளையாட்டு வீரரான செளம்யா சுவாமிநாதன், ஆசியப் போட்டியில் கலந்துகொள்வது தொடர்பாக அதிரடியான முடிவெடுத்துள்ளார். அது, சமூக ஊடகங்களில் வைரலாக உள்ளது.

செளம்யா சுவாமிநாதன்

செளம்யா சுவாமிநாதன் நமது நாட்டைச் சேர்ந்த முன்னணி சதுரங்க வீரர். 2005 மற்றும் 2006 ஆண்டுகளில் இந்திய ஜூனியர் பெண்கள் சாம்பியன் ( Indian junior girls' champion) வாகை சூடியவர். 2008-ம் ஆண்டில், மகளிர் பிரிவில் கிராண்ட் மாஸ்டர் ( Woman Grandmaster) பட்டம் வென்று, இந்தியாவின் பெருமையை நிலைநாட்டியவர். இந்திய செஸ் சாம்பியன் ( Indian Chess Championship) பட்டத்தையும் வென்றவர். உலகின் மிகப் பிரபலமான சதுரங்க வீரர்களோடு போட்டியிட்டவர். இவர் தட்டிச்சென்ற பட்டங்களின் பட்டியல் நீளமானது. வளர்ந்துவரும் இளம் சதுரங்க வீரர்களுக்கு ரோல்மாடலாக விளங்குபவர். குறிப்பாக, பெண் வீரர்களுக்குத் தூண்டுகோலாக இருப்பவர்.

வருகிற ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை, ஆசிய போட்டிகள் இரான் நாட்டில் நடைபெறவுள்ளது. இதில், இந்தியாவின் சார்பில் சதுரங்க அணியில் தேர்வாகியிருந்தார் செளம்யா சுவாமிநாதன். ஆனால், இரான் நாட்டில் விதிக்கப்பட்டிருக்கும் சில விதிமுறைகளால், தனது பயணத்தை ரத்து செய்திருக்கிறார். இதுகுறித்து, தனது முகநூலில் விரிவாகப் பதிவிட்டிருக்கிறார்.

`இரான் நாட்டில் விளையாடும் பெண் வீரர்கள், புர்கா அல்லது தலைமுக்காடு அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை நான் விரும்பவில்லை. அந்த நாட்டுச் சட்டம் என்னுடைய அடிப்படியான மனித உரிமையையும் கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தையும் நேரடியாக மீறுகிறது. என்னுடைய உரிமைகளைப் பாதுகாக்க ஒரே வழி, இரான் நாட்டுக்குச் செல்லாமல் இருப்பதே. இதுபோன்ற அதிகாரபூர்வமான சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்பது ஏமாற்றமடையச் செய்கிறது. ஒரு நாட்டின் அணி, அதிகாரபூர்வமான சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடும்போது, அந்த நாட்டுச் சீருடை அணிந்திருக்க வேண்டும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், மத அடிப்படையான ஆடைகளுக்கான விதிமுறைகளைக் கட்டாயப்படுத்துவதற்கு விளையாட்டில் இடமில்லை' என்று ஆதங்கத்துடன் தன் மனப்பதிவைப் பகிர்ந்துகொள்ளார் செளம்யா சுவாமிநாதன். 

செளம்யா கூறும் ஆடை விதிமுறைகளின் காரணமாக 2016-ம் ஆண்டு, இந்திய வீரர் ஹீனா சிந்து போட்டியிலிருந்து வெளியேறினார். அவர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்பதற்காக இரான் செல்லவிருந்தார். இவர்களைப் போன்று மரியா சகோதரிகளும் போட்டியில் பங்கேற்க மறுத்திருக்கிறார்கள்.

செளம்யாவின் இந்த முடிவு குறித்து சமூக ஊடகங்களில் விவாதம் சூடுபிடித்துள்ளது. `விளையாட்டு என்பது ஒருவரின் அல்லது ஓர் அணியின் திறமையைப் பரிசோதிப்பதற்கானது. அங்கு ஓர் அடையாளத்துக்காக அந்த நாட்டு விளையாட்டு வாரியம் தேர்ந்தெடுக்கும் உடையை அணிந்துவருவது இயல்பானது. ஆனால், மதரீதியாக இந்த உடையைத்தான் உடுத்த வேண்டும் எனச் சொல்வது முறையானது அல்ல' என்று சமூக ஊடகங்களில் கருத்துகள் பரிமாறி வருகின்றனர்.

இரான் போட்டியில் கலந்துகொள்வதைக் கைவிடும் செளம்யா சுவாமிநாதனின் முடிவை, தனி நபர் சார்ந்ததாகப் பார்க்காமல், இதற்குத் தொடர்புள்ளவர்கள் ஆராய்ந்து, நல்ல முடிவைத் தாமதிக்காமல் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்போதுதான் வருங்காலத்தில் இன்னொருவருக்கு இதுபோன்ற நிலை ஏற்படாது. செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

 


டிரெண்டிங் @ விகடன்