வெளியிடப்பட்ட நேரம்: 09:29 (14/06/2018)

கடைசி தொடர்பு:10:16 (14/06/2018)

ரயில்களில் உணவு எப்படித் தயாராகிறது? - ஐ.ஆர்.சி.டி.சி-யின் நேரடி ஒளிபரப்பு

ரயில் உணவு

இந்திய ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் தரமானதாக உள்ளதா என்பதை உறுதிசெய்ய, ரயில்வே அமைச்சகம் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஓடும் ரயில் உணவுகள் எப்படி சமைக்கப்படுகின்றன என்பதை இணையதளம் வழியாகப் பயணிகள் கண்காணிக்க முடியும்.

பியுஷ் கோயல் இதுகுறித்து, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், 'ரயில்களில் சமைக்கப்படும் உணவுகள் தரமற்றதாகவும் சுத்தம் இல்லாமலும் சமைக்கப்படுகின்றன என்று பயணிகள் நீண்டகாலமாகக் குற்றம் சாட்டிவருகின்றனர்.  அதைச் சரிசெய்ய, ரயில்களில் உள்ள சமையல் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. ரயில்வே உணவுத் துறைக்குச் சொந்தமாக 200 சமையலறைகள் உள்ளன. இதில், முதலில் 16 சமையலறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

இதன்படி, ரயில்களில் சமைக்கப்படும் உணவுகளைப் பயணிகள் நேரடியாகப் பார்க்கலாம். முதற்கட்டமாக டெல்லி, மும்பை, ஜான்சி, புவனேஸ்வர் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் ரயில்களில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. உணவுகள் சமைக்கப்படுவதை, ஐ.ஆர்.டி.சி இணையதளத்தின் வாயிலாகப் பயணிகள் நேரடியாகப் பார்க்கலாம்.  இதை, விஷன் கம்ப்யூட்டிங் என்ற முறையில் செயல்படுத்த உள்ளோம். 

இதன்படி, சமைக்கப்படும் உணவுகளில் ஏதேனும் குறைபாடுகளைப் பயணிகள் கண்டால், உடனடியாகப் புகார் தெரிவிக்கும் வசதியும் உள்ளது. புகார்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு உடனே கொண்டுசெல்லப்பட்டும். ஒப்பந்ததாரர் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தபடியாக ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு புகார் செல்லும் வசதி உள்ளது.' என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், `ரயில்களில் பயணம் செய்யும் பொதுமக்களின் நலனில் ரயில்வே துறை மிகவும் அக்கரையாக உள்ளது. பயணிகளின் வசதிக்காகப் பலவேறு புதிய முயற்சிகளையும் எடுத்துவருகிறோம்' என்றார்.