`முதல்வருக்கு மதிப்பளியுங்கள்’ - ஆளுநர் வீட்டில் தர்ணா இருக்கும் கெஜ்ரிவாலுக்கு மம்தா ஆதரவு

துணை நிலை ஆளுநர் இல்லத்தில் நான்காவது நாளாகத் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நடத்திவரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், ரேஷன் அட்டைகளை மக்களின் வீட்டுக்குப் போய் நேரடியாக வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்குவது போன்றவை தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தக் கடந்த திங்கள்கிழமை இரவு டெல்லி துணை ஆளுநர் அனில் பைஜாலை சந்திக்க அவரின் வீட்டுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சென்றுள்ளார். ஆனால், துணை நிலை ஆளுநர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க மறுப்பு தெரிவித்ததால் அவரது வீட்டின் வரவேற்பு அறையிலேயே அமர்ந்து கெஜ்ரிவால் தர்ணா போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். அவருடன் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் கோபால் ராய், சத்யேந்திர ஜெயின் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் சிசோடியும் சத்யேந்திர ஜெயினும் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்தப் போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது. இதுவரை அனில் பஜால், கெஜ்ரிவாலை சந்திக்கவில்லை. ஆனால், தொடர்ந்து கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் அனில் பஜால் வீட்டிலேயே உள்ளனர். இவர்களின் தர்ணாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஆங்காங்கே சாலைகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இவர்களின் போராட்டத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில நாளாக டெல்லி துணை நிலை ஆளுநர் இல்லத்தில் போராட்டம் நடத்தி வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கும் மதிப்பளிக்க வேண்டும். இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வுக்கான வேண்டும் என இந்திய அரசையும் டெல்லி துணை ஆளுநரையும் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், இன்று காலை உண்ணாவிரதம் இருக்கும் மனிஷ் சிசோடி மற்றும் சத்யேந்திர ஜெயின் ஆகிய இருவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. அந்தப் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் உடல் நிலை குறித்த தகவல்களை டெல்லி ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!