வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (14/06/2018)

கடைசி தொடர்பு:17:40 (14/06/2018)

`பெட்ரோலுக்கு 9 ரூபாய் விலைக்குறைப்பு!’ - ராஜ் தாக்கரேயின் பிறந்தநாள் பரிசு

ராஜ் தாக்கரே

ராஜ் தாக்கரே பிறந்தநாளை முன்னிட்டு, மகாராஷ்ட்ராவில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒன்பது ரூபாய் வரையில் விலை குறைத்து, சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவராக இருக்கிறார் ராஜ் தாக்கரே. இன்று அவருக்கு 50 வது பிறந்தநாள். இந்தநாளை வெகு விமரிசையாகக் கொண்டாட விரும்பிய அவர், குறிப்பிட்ட பெட்ரோல் பங்குகளில் 1 லிட்டர் பெட்ரோல் விலையில் நான்கு ரூபாய் முதல்
9 ரூபாய் வரையில் குறைத்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதை எதிர்பார்க்காத மகாராஷ்ட்ரா மக்கள், பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் நின்று, வண்டிகளுக்குப் பெட்ரோல் போட்டுச் சென்றனர்.

ராஜ் தாக்கரேயின் இந்த ஏற்பாடு குறித்துப் பேசிய சாகர் என்பவர், `கடந்த சில தினங்களாக, பெட்ரோல் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 84.26 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. இந்த விலை ஏற்றம் காரணமாக என்னுடைய வண்டிக்குக் குறைந்த அளவில் பெட்ரோல் போட்டு வந்தேன். நீண்ட நாள்களுக்குப் பிறகு, இன்றுதான் பைக்கின் பெட்ரோல் டேங்கை நிரப்பியிருக்கிறேன்’ என்றார் உற்சாகத்துடன்.

`பெட்ரோல் விலையால் நடுத்தர, சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் குறைவான சம்பளம் பெறுபவர்கள், இளைஞர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, பெட்ரோல் விலையை விரைவில் பிரதமர் குறைப்பார் என எதிர்பார்க்கிறேன்' எனக் குறிப்பிட்டார்.