வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (14/06/2018)

கடைசி தொடர்பு:20:40 (14/06/2018)

`இது ரயில்வே அமைச்சகத்தின் தவறு!’ - ரூ.13,000 இழப்பீடு பெறும் முதியவர்

`தவறாக அச்சடிக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுடன் பயணம் செய்த முதியவருக்கு, ரயில்வே அமைச்சகம் 13,000 ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும்' என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ரயில்வே

உத்தரப்பிரதேச மாநிலம், சஹாரன்பூரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர் விஷ்ணுகாந்த் சுக்லா (73). இவர், கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதியன்று, தவறுதலாக அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுடன் சஹாரன்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்திருக்கிறார். அவரது, டிக்கெட்டில் 2013-ம் ஆண்டு என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக 3013-ம் ஆண்டு என்று குறிப்பிட்டு தவறாக அச்சடிக்கப்பட்டிருந்தது. அந்த டிக்கெட்டை வைத்துக்கொண்டு ரயிலில் அவர் பயணித்துள்ளார். 

பயணத்தின்போது, சுக்லாவின் டிக்கெட்டை சோதனை செய்துள்ளார்  டிக்கெட் பரிசோதகர். அப்போது, பயணச் சீட்டு தேதியில் உள்ள தவற்றை சுட்டிக்காட்டி, 800 ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார். அதே ரயிலிலிருந்தும் பாதியில் இறக்கிவிடப்பட்டார் சுக்லா. இந்தச் சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டவர், உத்தரப்பிரதேச நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், `தவறுதலாக டிக்கெட் அச்சிடப்பட்டதற்கு ரயில்வே நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, பாதிக்கப்பட்டவருக்கு 13,000 ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.