காஷ்மீரில் மூத்த பத்திரிகையாளர் சுஜாத் புஹாரி சுட்டுக்கொலை!

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் `ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான சுஜாத் புஹாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேற்று மாலை ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் நடைபெற்ற இப்தார் விருந்தில் கலந்துகொண்டு `ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரி, காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை  வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இந்தத் தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார், அவரது பாதுகாவலர்கள் இருவர் காயம் அடைந்தனர்.

சுஜாத்

குண்டடிபட்ட புஹாரி மற்றும் இரண்டு பாதுகாவலர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். புஹாரி சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் சேர்த்தவுடனே உயிரிழந்தார். தீவிர சிகிச்சையில் இருந்த இரண்டு பாதுகாவலர்களும் சிகிச்சைப் பலன் அளிக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

புஹாரி  சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஜம்மு- காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி கண்டனமும் இரங்கலும் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!