வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (15/06/2018)

கடைசி தொடர்பு:08:40 (15/06/2018)

`4 ஆண்டுகளில் 19 முறை மட்டுமே நாடாளுமன்றத்துக்கு வந்த மோடி' - ஆம் ஆத்மி எம்.பி குற்றச்சாட்டு..!

கடந்த 4 ஆண்டுகளில் மோடி 19 முறை மட்டுமே நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றுப் பேசியுள்ளார் என ஆம் ஆத்மி எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். 

மோடி

``சட்டப்பேரவைக்குச் சரிவர வருவதில்லை என்றும் கடந்த 2017-ம் ஆண்டு 27 முறை சட்டமன்றம் கூடி அதில் கெஜ்ரிவால் 7 முறை மட்டுமே வந்துள்ளார். இதனால் அவரின் சம்பளத்தைப் பிடித்தம் செய்ய வேண்டும்." இது டெல்லி உயர் நீதிமன்றத்தில் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஆம் ஆத்மியின் அதிருப்தி எம்.எல்.ஏ கபில் மிஸ்ரா தொடர்ந்த  புகார். இவரின் புகாரைத் தொடர்ந்து இதேபோன்ற புகார் ஒன்று அதே டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரதமர் மோடி மீது தொடுக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஆம் ஆத்மியின் எம்.பியான சஞ்சய் சிங் தான் பிரதமர் மோடி மீது புகார் மனு தொடுத்துள்ளார். அதில், கடந்த 4 ஆண்டுகளில் நாடாளுமன்றத்துக்கு மோடி 19 முறை மட்டுமே வந்துள்ளார். எனவே, அவரை முறையாக நாடாளுமன்றத்துக்கு வர உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள  எம்.பி சஞ்சய் சிங், ``கடந்த 4 ஆண்டுகளில் மோடி 19 முறை மட்டுமே நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றுப் பேசியுள்ளார். அதிலும், மசோதா தாக்கல் செய்யும்போது ஒரு முறை, அமைச்சர்களை அறிமுகம் செய்யும்போது 5 முறையும் 6 முறை நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போதும் 2 முறை சிறப்பு விவாதத்தின் போதும் பேசியுள்ளார். அதேவேளையில், கடந்த 4 ஆண்டுகளில் பா.ஜ.க-வின் 800 பொதுக்கூட்டங்களில் மோடி பேசியுள்ளார். விவசாயிகள் தற்கொலை, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, வங்கி மோசடி, பெண்கள் பாதுகாப்பு, விலை வாசி உயர்வு, வேலைவாய்ப்பு போன்ற நாட்டில் முக்கிய பிரச்னைகள் குறித்துப் பேச மறுக்கிறார். ஏன் 14 நாள்களுக்கு ஒருமுறை மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசும் அவர் நாடாளுமன்றத்தில் பேச மறுக்கிறார். நாடாளுமன்றத்தில் தனது அலுவலகத்துக்கு வரும் அவர், அவைக்கு வருவதில்லை. இதனால் அவரை அவைக்கு வர வலியுறுத்தி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளேன்" என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க