`62% அபகரிப்பு!’ மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

ங்களுக்கு அந்தப் போராட்டம் நன்றாகவே நினைவில் இருக்கும். மூன்று மாதங்களுக்கு முன்பு அது நிகழ்ந்தது. மகாராஷ்டிரத்தின் முக்கிய நகரமான நாசிக்கில் இருக்கும் தாமன் கங்காவின் கரையோரம் முப்பதாயிரம் விவசாயிகள் கூடினார்கள். அவர்களின் கடன் சுமையை அம்மாநில அரசு திரும்பப் பெற்றுக் கொள்வதற்கும், நதிநீர் இணைப்புத்திட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், பழங்குடிகளுக்கான தனிநபர் வன உரிமைச் சட்ட மீட்டெடுப்புக்காகவும் அந்தப் போராட்டம் நடைபெற்றது. நாசிக்கிலிருந்து பேரணியாகக் கிளம்பிய அந்த மக்கள், மகாராஷ்டிரத் தலைநகர் மும்பைவரை நடைப்பயணமாகச் சென்று தங்களின் கோரிக்கையை அரசிடம் வைத்தார்கள். மொத்தம் 165 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடந்த அவர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பின்னணியில் ஒன்று திரண்டிருந்தாலும் அந்த மக்கள் நடத்திய போராட்டத்தின் நேர்மைக்கும், உண்மைத்தன்மைக்கும் மரியாதை கொடுக்கும் விதத்தில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான அரசு, அந்த விவசாயிகளுடைய கோரிக்கைக்கு செவி சாய்த்தது. 

விவசாயிகள் போராட்டம்

ஆம். அவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு இசைந்தது. அத்தனை கிலோமீட்டர் தூரம் நடந்து வந்தது பலரின் கால்களை பதம் பார்த்திருந்தது. விவசாய நிலங்கள் பாளமாக வெடிப்பதுபோல, போராட்டத்தில் பங்கேற்றவர்களின் கால்கள் இருந்தன. பலருக்கு உடல் ரீதியான உபாதைகள் ஏற்பட்டன. இருந்தும், அரசு எப்படியும் தங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்துவிடும் என்கிற நம்பிக்கையில் பேரணி முடிந்து, அன்றிரவு அவரவர்களின் ஊர்களுக்கு விவசாயப் பழங்குடி மக்கள் ரயில்களில் பயணம் செய்தார்கள். போராட்டம் முடிந்து மூன்று மாதங்கள் கழிந்துவிட்டன. ஆனால், அங்கு தற்போதைய நிலை வேறு. கடன் தள்ளுபடி செய்வதாகச் சொன்ன அரசு, தற்போது தங்களின் நிலங்களையே பதிவு செய்து அபகரிப்பதாக புகார் கூறி வருகின்றனர் அந்த மக்கள். நிலங்களுக்காக விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்த அந்த மாநில பி.ஜே.பி. அரசு, தற்போது ஏன் அந்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்கியது? 

இதுகுறித்து விளக்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் அசோக் தவாலே, ``மும்பை மற்றும் அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டம், நீண்டகாலத்துக்குப் பிறகு தற்போது அதிவிரைவாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மற்றொன்று மும்பையிலிருந்து பரோடா வரையிலான புதிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டம். இந்த இரண்டு திட்டங்களுக்காகதான், விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்களின் பெரும்பாலான விவசாய நிலங்கள் தற்போது மகாராஷ்டிர அரசால் நிலமீட்பு என்ற பெயரில் அபகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த இரண்டு திட்டங்களுமே தேவையற்றது.

அசோக் தவாலேமும்பை மற்றும் அகமதாபாத் இடையிலான விமான பயணச்சீட்டுத் தொகை ரூ. 2000 ஆகிறது. அறிவித்தபடி இந்த புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அதற்கான பயணக் கட்டணம் ரூ.3,000 என்று அரசு கூறியிருக்கிறது. இப்படியான செலவு விரயத்துடன் ஜப்பான் நாட்டு அரசிடம் கடன் பெற்று நிறைவேற்றப்படும் ஒரு பயணத் திட்டத்தை மக்கள் தேர்ந்தெடுப்பார்களா. மேலும், மும்பை மற்றும் பரோடா இடையில் ஏற்கெனவே 6 வழிச்சாலை ஒன்று இருக்கும்போது, புதியதாக இந்த 8 வழிச்சாலை எதற்கு. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்தத் திட்டம் என்றால் ஏற்கெனவே இருக்கும் 6 வழிச்சாலையை விரிவுபடுத்தி இருக்கலாம். ஆனால், விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்துவதற்காகவே புதிதாக சாலை அமைக்கும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்துவது போலத் தோன்றுகிறது. விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும் என்று கடந்த மார்ச் மாதத்தில் அரசு அறிவித்தது. ஆனால், அதன் பிறகு நடந்ததோ வேறு. விவசாயிகளின் நிலங்கள் அரசால் தொடர்ந்து அபகரிக்கப்பட்டு வருகின்றன. பழங்குடி மக்களுக்கான தனிநபர் வன உரிமைச்சட்டம் அரசாலேயே சட்டப்படி அத்துமீறப்படுகிறது. இதுவரை பழங்குடியினர் வம்சாவளியாக உழுது பயிர் செய்த 62% நிலங்கள் அரசால் சட்டப்படி கையகப்படுத்தப்படுகின்றன” என்றார். 

சட்டப்படியே நிலம் கையகப்படுத்தப்படுவதால், இதில் மேலதிக விளக்கங்களைத் தரத் தேவையில்லை என்கிற நிலையில் இருக்கிறது மகாராஷ்டிர மாநில அரசு. போராட்டத்துக்கு தற்காலிகத் தீர்வு காணவே வாக்குறுதி அளித்ததா அரசு. விவசாயிகள் தற்கொலை அதிகம் நிகழும் மாநிலத்தில் விவசாயப் பழங்குடிகள் மீதான இப்படியான நடவடிக்கைகள் தேசத்தின் விவசாயக் கட்டமைப்பைப் பாதிக்காதா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!