வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (15/06/2018)

கடைசி தொடர்பு:17:12 (15/06/2018)

`சேவாக் ட்வீட்டுக்கு நன்றி!' - நெகிழவைத்த 72 வயது `சூப்பர் உமன்’

`சூப்பர் உமன்’ எனப் பெயரெடுத்திருக்கிறார், மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர். `இவரிடமிருந்து இளைஞர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்' என முன்னாள் நட்சத்திர வீரர் வீரேந்தர் சேவாக் பாராட்டியிருக்கிறார். 

சூப்பர் உமன்

மத்தியப்பிரதேச மாநிலம், செஹோரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், லட்சுமி பாய் (72) என்ற மூதாட்டி டைப்-ரைட்டராகப் பணிபுரிந்துவருகிறார். அங்கு வழங்கப்படும் விண்ணப்பங்கள், கோரிக்கை மனுக்கள் ஆகியவற்றை இந்தியில் தட்டச்சு செய்வது இவரது முக்கியமான பணி. இவரது சிறப்பம்சமே, மின்னல் வேகத்தில் டைப் செய்து அசத்துவதுதான். இதைப் பற்றிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தச் சம்பவத்தையடுத்து, லட்சுமி பாயின் புகழ் பரவியது. இந்த வீடியோ காட்சியை ரசித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வீரேந்தர் சேவாக். ` இவர் ஒரு சூப்பர் உமன், இளைஞர்கள் லட்சுமி பாயிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்' எனக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். 

'சூப்பர் உமன்' எனக்கூறி ட்விட்டர் பதிவின்மூலம் தன்னைப் பாராட்டிய வீரேந்தர் சேவாக்குக்கு நன்றி தெரிவித்துள்ள லட்சுமி பாய்,` எனது மகள், சமீபத்தில் விபத்தில் சிக்கினார். அப்போது, மருத்துவச் செலவுக்காக வாங்கிய கடனை திருப்பி அடைக்க இந்த வேலையில் சேர்ந்தேன். துணை ஆணையர் ராகவேந்திர சிங் மற்றும் எஸ்.டி.எம். பாவன விலாம்பே ஆகியோர், டைப் - ரைட்டர் வேலை கிடைப்பதற்கு எனக்கு உதவிசெய்தனர். தற்சமயம் கடனை அடைப்பதற்கு உதவி தேவை. நிரந்தரமாகக் குடியிருக்க வீடு தேவைப்படுகிறது. என்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்ட சேவாக்கிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என நெகிழ்ச்சியோடு பேசியிருக்கிறார்.