`விவசாயிகள் அச்சப்பட வேண்டாம்!' - கடன் தள்ளுபடி குறித்து குமாரசாமி பதில்

`விவசாயக் கடன்கள் நிச்சயமாகத் தள்ளுபடிசெய்யப்படும்; அதனால் குழப்பம் அடைய வேண்டாம்' என கர்நாடக முதல்வர் குமாரசாமி விளக்கம் அளித்திருக்கிறார். 

குமாரசாமி

கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, தற்காலிக முதல்வராகப் பதவியேற்ற பா.ஜ.க-வின் எடியூரப்பா, விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார். இந்நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், அடுத்துவந்த நாள்களில் பதவி விலகினார். இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவில் முதல்வரானார், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமாரசாமி. காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைத்திருந்தாலும், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான பிரச்னையால் தேர்தலுக்குமுன் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழலில் இருக்கிறார். இதனால், ' விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா?' என்ற அச்சத்தில் கர்நாடக விவசாயிகள் உள்ளனர்.

இதற்கு, ட்விட்டரில் பதில் அளித்துள்ள முதல்வர் குமாரசாமி, ' விவசாயிகள் அச்சப்பட வேண்டாம். விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதில் எந்தக் குழப்பமும் இல்லை. கடன் தள்ளுபடி செய்வதில் முழுமையாக ஈடுபட்டுள்ளேன். நான் ஒன்றை உறுதிப்படுத்த விரும்புகிறேன். பெரும்பாலான விவசாயிகள், அறிவியல் பூர்வமாகப் பயன் அடையும் வகையில் செயல்படுவேன். இது தொடர்பான வேலையில் இறங்கியுள்ளேன். விரைவில் விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!